பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


இடங்களில் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியென்றும், சிறந்த மொழியென்றும் கூறியிருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அஃது அவருடைய கருத்தாக நாம் கொண்டு பெருமைப்பட முடியாது. ஏனெனில் தமிழ்மொழிக்கு இயல்பாகவே உள்ள இத்தன்மைகளை இவர்போலும் உள்ள பிராமண நூலாசிரியர்கள் பலர் மாற்றியும், மறைத்தும், குறைத்துமே மதிப்பிட்டுப் போந்தனர். அவ்வாறின்றி இவர் தமிழ் மொழி பற்றிய உண்மையான கருத்துகளைச் சொன்னது பாராட்டுக்குரியதே! ஆனாலும், அவர் அவற்றைச் சொல்லு முகத்தான் தம் உள்நோக்கத்தை மறைத்துவிட முடியவில்லை என்பதற்காகவே இதனை இங்கெடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று. இவ்வகையில் இவ்வினத்தவரும் இவரடித் தமிழ்க் கோடரிக் காம்புகள் சிலரும் ஆங்காங்குப் புகுத்திய நச்சுத்தனமான கருத்துகளை யெல்லாம் எடுத்தெழுதின் அவை ஒரு நூலாகவே விரியும். எனவே இதை இவ்வளவில் நிறுத்திக்கொண்டு அவர்களின் மூன்றாவது தந்திர முறையினைப் பார்ப்போம்.

ஆரியத்துக்குத் துணைபோவார்க்குப்
பாராட்டுகளும் உதவிகளும் !

அது, வடமொழி ஏற்றத்துக்கும், ஆரியர்தம் பெருமைக்கும் துணை நின்று நூலெழுதும் தமிழ்ப் புலவர்களைத் தாங்கிப் போற்றிப் பாராட்டுதலும், உதவிகள் முதலியன செய்தலும், அவ்வாறல்லாத பிறரை அந்தத் தமிழ்ப் புலவர்களைக் கொண்டே தாக்கித் தூற்றி எழுதுவதும் மறைமுகமாக இடர் விளைவிப்பதும் ஆகும்.

இத் தந்திரத்திற்காட்பட்டு இவர்களின் பாராட்டுக்கும், உதவிக்கும், அங்காந்துதான், வையாபுரி, தெ.பொ.மீ., சேது முதலிய பெரும் புலவர்கள்கூடத் தம் புலமையை அவர்களுக்குச் சார்பாக விலைபேசியும் விற்றும், பெயரும், புகழும், பெரும் பணமும் பெற்று வந்திருக்கின்றனர். இவ் வழியில் அவர்களைத் தொடர்ந்து போகாதவர்கள் போல் வெளிக்குக் காட்டி, அவர்களின் கருத்துகளை எதிர்த்துப் போகாமல் தம்மை நல்ல பிள்ளைகளாக ஆரியத்துக்குக் காட்டிக் கொள்ளும் பேராசிரியர்கள் சிலர் உளர். அவர்கள் தமிழர்களுக்கும் சில நேரங்களில் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்வதும், அதனால் தமிழராட்சியுள்ள இக்காலத்தில் பல்கலைக் கழகத்துணைக் கண்காணகர்போலும் பெருமையும் பெரும்பொருள் வருவாயும் உள்ள பதவிகளில் அமர்த்தப் பெறுவதும் உண்டு. அத்தகையார் எழுதும் நூல்களில், ஆரியர் குறும்புகளை