பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

45

“பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையெழுதிய இந் நூலுக்கு உரையெழுதும் தகுதி என்பாற் சிறிதுமில்லை யென்பதையும், என் முதுமையாலும் பல்வேறு வகையான முட்டுப்பாடுகளாலும் எனக்குண்டாகியுள்ள தளர்ச்சியையும் நன்கு உணர்ந்திருப்பினும், இளமை தொடங்கி, இவ்வுலகில் யாதினும் சிறந்ததாக எண்ணி வாழ்ந்து வருவதற்குக் காரணமாகிய தமிழிடத்துள்ள அன்பும், எங்ங்ணமேனும் இறைவன் இம் முயற்சியை நிறைவேற்றி யருள்வானென்ற துணிவும் இப்பதிப்பில் என்னை ஈடுபடச் செய்தன”.

- என்றெழுதியுள்ள பகுதி அவர் தமிழ்மேல் கொண்ட அன்பைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இருப்பினும் அவரின் சமசுக்கிருதப் பற்றும் ஆரிய மேலாண்மை உணர்வும் அவருடைய இக்கூற்றை மெய்ப்பிக்கவில்லை.

இவர் நூல்களில் எங்கும் தமிழ்ப்பாஷை என்றெழுதுவாரே தவிர தமிழ்மொழி என்று எழுதவே மாட்டார். நூல்களைப் புஸ்தகங்கள் என்றெழுதுவதே இவர் வழக்கம். தமிழில் வடமொழிச் சொற்களை விழிப்பாகவும் அவற்றை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவையின்றித் தமிழே இயங்காது என்பதை உண்மைபோல் மற்றவர்களுக்குப் புலப்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் இவர் எழுதும் உரைநடைகளிலெல்லாம், அளவிறந்து கலந்து எழுதியது இவரின் வடமொழி உயர்வு மயக்கத்தைத் தெளிவாகக் காட்டும். ஒருகால் ஒரன்பர் இவரிடத்து ‘வணக்கம்’ என்று சொல்லி வணங்கியும் அதனை ஏற்றுக்கொள்ளாது ‘நமஸ்காரம்’ என்று கூறச்சொல்லி, அதனை ஏற்று நிறைவடைந்த நிகழ்ச்சியை அறிந்தால் உ.வே.சா. அவர்களின் வடமொழி யுயர்த்தமும், ஆரிய இன மேம்பாட்டு நினைவும் அவரை விட்டு அகலவே இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

கழக நூல்களை அவர் வெளியிடும்பொழுதெல்லாம் ‘அந்தணர்’ என்று வரும் இடங்களிலெல்லாம் அவர் ஆரியப் பார்ப்பனர் என்றே சிறப்புரையெழுதி மக்களை மயங்கச் செய்து வந்ததுடன் அவர்களின் நடையுடை பழக்கங்களை மிகவுயர்ந்தனவாகக் காட்ட, எப்படியெப்படி இட்டுக்கட்டிச் சொல்ல முடியுமோ, அப்படியப்படி யெல்லாம் தவறாமல் சொல்லியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

புறநானூற்றில் ‘ஆன்முலையறுத்த’ என்று தொடரும் 34-ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல், யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று