பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக் கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப்பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடாதெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும், அதில் உள்ள 305-ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு சொற்கு ‘அவரவர் சாதி இயல்பு’ என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67-ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும் பார்ப்பணியையும் தலைவராகக் கூறியது - எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற் குரியது’ என்றும்.

‘அறிவுடையிரே’என்று தொடங்கும் குறுந்தொகை 206-ஆம் பாட்டின் அடியில், பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரயென்று தெரிகின்றது’ என்றும்,

‘ஆசில் தெருவில்’ என்று தொடங்கும் 277-ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடையென்றும் சிறப்பித்தமையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோற்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.