பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதையும் கொஞ்சம் சொல்லித்தான் ஆகல்வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனை யாற்றலை வேண்டுமானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால் கற்பனையாற்றல் இருப்பவர்களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் பயிற்சியையும் சொல்லாற்றலையும், இயற்கை யீடுபாட்டையும் உலகியலறிவையும், மெய்யுணர்ச்சியையும் பொறுத்து அமைவது. கற்பனைத்திறன் பொதுவாக எல்லாரிடத்தும் இருக்கும். மொழிப் பயிற்சியோ, சொல்லாற்றலோ, உலகியலறிவோ, மெய்யுணர்ச்சியோ, இலக்கியப் பயிற்சியோ எல்லாரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவை பயிற்சியினாலும் கல்வியினாலுமே கைவருவனவாகும். இயற்கை யீடுபாடோ சூழலால் அமைவதாகும்.

பாரதியாரிடம் கற்பனையாற்றலும் அதை வெளிப்படுத்தும் உணர்ச்சியும் ஓரளவு இருந்தன என்று சொல்லலாமே தவிர, மொழிப் பயிற்சியும், சொல்லாற்றலும், இலக்கியப் பயிற்சியும் அவ்வளவு மிகுந்திருந்தனவாகச் சொல்ல முடியாது. உலகியலறிவும், மெய்யுணர்ச்சியும் அவ்வளவு சிறப்புற விளங்கியிருந்தன என்றும் பாராட்ட முடியாது. இயற்கை ஈடுபாடும் ஒரளவே இருந்தது, ஆனால் அவர் கம்பனுக்கும் மேல், இளங்கோவுக்கும் மேல் பாராட்டப் பெறுவதன் நோக்கமெல்லாம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு இருக்க முடியாது. பாட்டுத்திறத்தில் பாரதிதாசன் அவரைப் பலவகையிலும் வென்றிருக்கின்றார். ஆனால் அவர் ஒரு தமிழர்; அதுவும் தன்மான எழுச்சியுள்ள தனித்தமிழர் என்பதற்காகவே ஆரியப் பார்ப்பனராலும் நம் வீடனத் தமிழர்களாலும் அழுத்தி வைக்கப் பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கிய வுலகில் கம்பனைப் போல் கற்பனை வளம் படைத்தவர்களைக் காணமுடியாது. இளங்கோ போல் மொழி வளம் மிக்கவர்களும் அருமையே. ஆனால் கம்பனுக்கு விழா எடுப்பது போல் பாரதியாருக்கும் விழா எடுப்பது போட்டி போட்டுக் கொண்டு செய்யும் ஓர் இன எழுச்சி ஈடுபாடேயொழிய இலக்கியச் சிறப்பான ஒரு செயலன்று. தேசியப் பாவலர் என்பதில் வேறு ஆரியச் சூழ்ச்சி புதைந்து கிடக்கிறது.

கம்பனுக்கு விழா எடுப்பதிலுங்கூட ஆரியப் பார்ப்பனர்க்கே