பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

53


மிகுந்த அக்கறையுண்டு என்பதும் இன்னொரு வேடிக்கை. அவன் இராமாயணத்தை எழுதினான் என்பதே அவன் பாராட்டப் பெறுவதற்குத் தலையாய ஒரு கரணியம். ஏனெனில் இராமாயணத்தில்தான் வேறு எந்த நூலையும்விடத் தமிழர் இழிவு செய்யப் பெற்றுள்ளனர். அதனால் பார்ப்பனர்க்கு அதில் ஈடுபாடு மிகுதி. இதற்காகவே கம்பனும், ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே பாரதியாரும் பாராட்டப் பெறுகின்றனர். பார்ப்பான் ஒரு துறையில் உள்ள ஒருவனைப் பாராட்ட வேண்டுமானால் முதலில் அவன் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அல்லது அவன் ஒரு பார்ப்பன அடிமையாகவேனும் இருத்தல் வேண்டும். இவ்விரண்டு தகுதியும் ஒருவனிடம் இல்லையானால் அவன் பனைமர உயரத்தவன் என்றால் குட்டையன் என்பான்; பரந்தமுடித் தலையன் ஆனாலும் மொட்டையன் என்பான்.

பாரதியாரின் பாட்டு ஆராய்ச்சியைப் பிறிதொருகால் பார்ப்போம். இக்கால் அவர் தமிழைப் பற்றி மிகச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் ; தமிழ் மொழிக்கு மிகப்பெருமை சேர்த்திருக்கின்றார் என்று தமிழர்களே பாராட்டுகின்றனரே, அந்தப் பாராட்டில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை மட்டும் பார்ப்போம். அவர் தமிழ் உரைநடை இது.

ஸூர்யோதத்திலேயும் ஸூகிர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் கட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு”.

- பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்

இவ்வாறான ஒரு நடையைப் பாரதியார் எழுதினால் என்ன? யார் எழுதினால் என்ன? இதனால் தமிழ்மொழிக்கு ஆக்கம் ஏற்படும் என்று எவராவது சொல்லமுடியுமா? தம் வடமொழி கலந்த நடை, ‘நம்மவர்க்குப் பிரியந் தருவதாகும்' என்று வேறு பாரதியார் குறிப்பிடுகின்றார். அவர் கண்ணோட்டத்தில் இவ்விந்திய நாடும் இங்குள்ள மக்களும் எவ்வாறு கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் உரையால் அறியலாம்.

“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும்