பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


தமிழர்களுக்கு எந்த நாடு உரிமையுடையது? தமிழ்நாடு என்பதாகவே ஒரு நாடு இருப்பதாக அவர் நினைவு கொள்ளவில்லை. இந்திய நாட்டில் அடங்கிய பத்தொன்பது திரவிட நாட்டுப் பகுதிகளும் ஆரியர்களுடையனவே என்று வல்லடி வழக்கு நடத்தியிருக்கின்றார்.

‘ஆரியர்’ என்பது பெருமைக்காகச் சொல்லப் பெற்றதாகத் தெரியவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரு பெயர் சொல்ல வேண்டுமே என்றுங் கூட அந்தப் பெயரைச் சொன்னதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்தம் இனப் பெருமையை நிலைநாட்டவே அவ்வாறு சொல்லியிருக்கின்றார். இன்னொருவர்க்குச் சொந்தமான ஒரு வீட்டை அல்லது பொதுவான ஒரு சாவடியை ஒருவன் தன் வீடு என்று சொன்னாலும் தாழ்வில்லை; தன் இனத்தாருடைய வீடு என்று சொல்வானானால் அவன் தன் இனத்தார்க்கு அதன் பெருமை அனைத்தும் வந்து சேர வேண்டும் என்று நினைக்கின்றவனா இல்லையா ? இதை எவரேனும் மறுக்க முடியுமா? இந்நாட்டை ஆரிய நாடாகக் கருதியதை, அவர் பொதுநோக்கங்கொண்டு சொன்னது என்பது, பித்தலாட்டமும் புரட்டுமாகும். வருங்காலத் தமிழ்க் குமுகாயத்தை இனி இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடியாது. மேலும் அவர் கூறியதைக் கவனியுங்கள்.

ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!”
வீரியம் ஒழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்
ஆரியர் புலையருக் கடிமைகள் ஆயினர்”
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்”

ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி, இந்தியாவை ஆரியர்க்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி பாரதியாரிடம் நிறைய இருந்திருக்கின்றது. ஆரியர் என்றால் அவர்களிடம் ஒரு தனித்தன்மை, சிறப்பு, எல்லாருக்கும் உயர்வான ஒரு தேவப் பெருமை இவையெல்லாம் இருப்பனவாகக் கற்பனை செய்து கொள்ளும் மனநிலை அவர் பாடல்களில் ஒலிக்கின்றது. இந்தியப் பண்பாடு, நாகரிகம், வீரம், சமயம் முதலிய அனைத்துப் பண்புகளையுமே அவர் ஆரியமாகப் பார்க்கின்றார். அப்பண்புகள் குறைந்தவரை அவர் ஆரியரினும் தாழ்ந்தவராகப் பேசுகின்றார்.