பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


ஒட்டியும் தழுவியுமே அந்நூல்கள் எழுதப் பெற்றன. அவ்வாறு செய்தது தம் ஆரியக் கருத்துகளைத் தமிழ்மொழியின் மூல நூல்களான இலக்கண நூல்களிலேயே நுழைத்தற்கு வேண்டியே தவிர, தமிழை வளர்க்க வேண்டியன்று. இம்முயற்சி இக்காலத்தும் நடந்து வருகின்ற வெளிப்படையான முயற்சியாகும். தஞ்சை ‘சரசுவதி மகாலில்’, பழைய ஓலைச் சுவடிகளைப் பெயர்த்தெழுதுகின்ற முயற்சியில், இவ்வாறு பழந்தமிழ்ச் சுவடிகளினின்று வடமொழியில் பெயர்க்கப் பெற்ற பின், அச்சுவடிகளையே அழித்துவிடுகின்ற இரண்டகச் செயல் இன்றும் நடந்துவருவதாக அங்கிருந்து பணியாற்றிய புலவர்களே அறிவிக்கக் கேட்டிருக்கின்றோம். இந்தக் கொடுமை மாந்தன் நிலாக்கோளில், இறங்கிய காலத்தும் துணிவாகவும் சூழ்ச்சியாகவும் நடைபெறுகின்றதெனில் அக்காலத்தில் நடைபெற்றிருக்க முடியாதென்று ஒரு கருத்துக் குருடனும் ஒப்பமாட்டான். மேலும் உ.வே.சா, போலும், பாரதியார் போலும் தமிழ்த்திறமும் ஈடுபாடும் கொண்டவர்கள் வாயிலிருந்தே இத்தகைய கருத்து வருவதற்கு வேறு பக்க வலிவுகளே தேவையில்லை.

அவ்வாறு அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்தபின்தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர்.

ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”

- என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். எளிய புலவர்கள் இவ்வாறு உண்மைக்கு மாறாக எழுதினாலும், பாரதியார் போலும் ஓரளவு சிறந்து விளங்கிய தேசியப் புலவர்கள் இவ்வாறு கற்பனைகளை உண்மைபோல் எழுதக்கூடாது. இப்படி எழுதுவதால் வரலாறு சிதைக்கப் பெற்று, உண்மை நிலைகள் உணரக் கூடாமற் போய்விடுகின்றன என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பாவலர்களும் இதற்கு நெறிவிலக்கினர் அல்லர். அவர்கள் கற்பனை, வரலாற்றைத் தழுவிய கற்பனையாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றுக்கு மாறான கற்பனையாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அத்தகைய கற்பனைகளால் எதிர்காலம் சிதைக்கப்படும் என்பதை உணர்தல் வேண்டும்.