பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


தாழ்ந்தவர்களல்லர். ஆனால் அதன் பொருட்டு, தங்கள் இனத்தை வேண்டுமென்றே தாழ்த்தி வைக்கும் நிலைக்கு - மிகவும் சிறந்ததும் உலக மொழிகளுக்கே தாயானதுமான தங்கள் மொழியை இழித்து ஒழிக்கும் நிலைக்குத் தமிழர்கள் தங்களை இனியும் ஆளாக்கிக் கொள்ளக்கூடாது. தமிழர்களின் இம்முயற்சியை ஆரிய இனம் மட்டுமன்று, உலகின் அனைத்து இனங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அவர்களாக உணராவிடத்து, தமிழர்கள் எவ்வகையானும் இதனை உணர்த்த, பறைசாற்றச் சிறிதும் தயங்கக் கட்டாது.

தமிழர்க்கென்று ஒரு தனிமொழி, தனிப்பண்பாடு, தனி நாகரிகம், தனிநாடு என்பன என்றும் உண்டு. அவற்றை வலியுறுத்துவதே தனித்தமிழியக்கத்தின் கொள்கை. அவை ஊறுபடுத்தப் பெறுங்கால், அல்லது சிதைக்கப் பெறுங்கால் அந் நிலைகளால் ஏற்படும் எதிர் விளைவுகளைத் தொடர்புள்ள அனைவருமே எண்ணிப் பார்க்க வேண்டுமேயல்லாமல், தமிழர் மட்டுமே எண்ணிப் பார்க்கவேண்டும் என்பது நடுநிலையற்ற ஒரு சார்பான - ஓரினத்தை மற்றோர் இனம் அழிக்கின்ற ஒரு அழிவுக் கொள்கையாகும். அந்நிலையை எத்தகைய மாந்த உணர்ச்சியுள்ளவனும் - அல்லது அவ்வுணர்ச்சியுள்ள எந்த ஓரினமும் பொறுத்துக் கொள்ள முடியாது. பிறிதோரினத்தினும் தங்களை ஓரினம் உயர்த்திக் கொண்டு பேசுவது, எழுதுவது, நடப்பது, மற்ற இனம் அதைப் பொறுத்துக்கொண்டு தான் கிடக்க வேண்டும் என்பது உடலில் நல்ல அரத்தம் ஓடாத கண்ணதாச அல்லது சுப்பிரமணிய அல்லது பக்தவத்சலத் தமிழர்களின் மானங்கெட்ட தன்மையாக விருக்கலாம். அது மற்றவர்களுக்கும் இருக்கத்தான் வேண்டும் என்னும் வெண்டைக்காய் அறிவுரை அறவுரையன்று; தமிழினத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் காட்டிக் கொடுப்பு உரை யாகும். அந்நிலைக்குத் தமிழர்கள் தாழக் கூடாது; எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

— தென்மொழி சுவடி : 11, ஓலை : 2-10,11, 1973