பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

65


காரணம் நம் தலைவர்களுக்கு மொழிப் பற்றும் மொழியறிவும் இல்லாமையேயாகும்.

திரு. இராசாசி, திரு. சி.பி. இராமசாமி அவர்களின் திட்டங்கட்கு, அவர்கள் கருதுகின்ற அடிப்படைக் காரணம், “தமிழும் வடமொழியும் ஏற்கனவே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட மொழிகள் கழகக் காலந் தொட்டே தமிழ்நாடு வடநாடு ஈடுபாடு கொண்டு, பல்லாயிரக் கணக்கான சொற்களையும் சொல் மூலங்களையும் கொண்டும் கொடுத்தும் வந்துள்ளன. தமிழின் பிள்ளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய தலையாய திரவிட மொழிகள் பிரிவதற்குக் காரணமாக இருந்ததும் சமற்கிருதமே. சமற்கிருதத் தொடர்பால் தோன்றிய பிற - திரவிட மொழிகளின் சிதைவே இக்கால வடநாட்டு மொழிகளிலும் பரவிக் கிடக்கின்றது. ஆகவே சமற்கிருத மொழி தென்னாடு வடநாடு இரண்டிற்கும் மாறுபாடில்லாத ஒரு மொழி. எனவே அம்மொழியே தேசிய மொழியாவதற்கு ஏற்ற மொழியாகும்” என்பதே! இக்கொள்கை இந்தியா முழுவதிலுமுள்ள பார்ப்பனர் எல்லார்க்கும் ஏற்ற கொள்கையாகும். இக்கொள்கைக்குத் துணையாக, ஆங்காங்கே அரசினர் அலுவலகங்களிலும், அமைச்சரகங்களிலும் வலிந்த அதிகாரங்களில் உள்ள பார்ப்பனர்கள் இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். பார்ப்பனரின் இக் கொள்கைப் போருக்குப் படைக்கருவிகளாக இருப்பன - செய்தித்தாள்கள், வானொலி, பொழுதுபோக்கு மன்றங்கள், மாதர் நலத்துறை முதலிய விளம்பரத் துறைகளும், அமைச்சரகம், செயலகம், பிற நாடுகளிலுள்ள ஒற்றரகங்கள், பிற நாட்டு நூல், தாளிகை வெளியீட்டு அகங்கள், இந்நாட்டுப் பிரிட்டிசு, அமெரிக்க உருசிய ஒற்றரகங்கள் முதலிய அதிகாரமும் ஆக்கமும் உள்ள துறைகளும், தமிழறியாத மொழி, இலக்கிய, அரசியல் வல்லடிமைகளும் அவர்தம் இரந்து குடிக்கும் மனப்பான்மைகளுமேயாகும். இங்கிருந்து உருசியாவுக்கும் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் போகும் பார்ப்பனர்கள் ஆங்காங்குள்ள மொழி, இலக்கிய, அரசியல் தொடர்பாக உள்ள பணிகள் அத்தனையிலும் தலையிட்டுச் சமற்கிருதமே உலக மொழிகளில் பெரும்பாலாக உள்ள மொழிக் குடும்பத்தின் சிறந்த மொழியென்றும், அதுவே இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்துக்கும் தாய் என்றும் பறைசாற்றுகின்றனர். அதற்குத் தக ஆங்காங்குள்ள மொழிகளில் இவைத் தொடர்பாக உள்ள ஓரிரண்டு சொற்களையும் எடுத்துக்காட்டி, அச் சொற்களுக்கான மூலவடிவம் தங்கள் மொழியாகிய சமற்கிருதத்தில் உள்ளதாகவும் எடுத்துக்கூறி,