பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அவர்களை வியப்பிலாழ்த்திப் பொருளும், மதிப்பும், ஏந்துகளும் தேடிக்கொள்கின்றனர். இங்கிருந்து தமிழ்த் தொடர்பாக வெளிநாடுகள் செல்லும் மீனாட்சிசுந்தரங்களும், சோமசுந்தரங்களும் வெளிநாடுகளில் ஏற்கனவே - பரவியுள்ள தவறான மொழிக் கொள்கைகளுக்கு ஏற்பவே தமிழைத் தாழ்த்தியும், வடமொழியை உயர்த்திப் பேசியும் வையாபுரியின் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இத்தனைத் துறைகளிலும் ஈடுபட்டுத் தம் ஆரிய மொழியாகிய சமற்கிருதத்தையும், ஆரியப் பண்பாட்டையும் பரப்பிவருகின்ற காரணத்தாலும், தமிழர்களின் விழிப்பின்மை, ஒற்றுமையின்மை, மொழியறிவு, உணர்வின்மை, துணிவின்மை - முதலியவற்றாலும் இன்று தமிழ்மொழிக்கென ஒரு பெரும் போராட்டமே நடத்திக் காட்ட வேண்டிய அளவுக்கு, வடமொழி ஊடுருவலும், இந்தித் திணிப்பும் - ஏற்பட்டுவிட்டன; ஏற்பட்டு வருகின்றன. தேவையும் பொழுதும் வாய்க்கையில் இப் புறச்செயல்களுக்கெல்லாம் உள்ளீடு காட்டி விளக்குவோம். இக்கால் சொல்வழக்கற்ற சமற்கிருதத்திற்கு மட்டும் சலுகைகள் பல காட்டிப் பரிந்து காக்கும் அரசினரைக் கடுமையாகக் கண்டிப்பதுடன், அப் பரிவு வேண்டுவதொன்றே ஆயின், அத்தகைய சலுகைகளைப் பிறமொழி வளர்ச்சியிலும் நேரடியாகக் காட்டும்படி நடுவணரசையும், மாநில அரசையும் கேட்டுக் கொள்கின்றோம். இத்தகைய முயற்சிக்கு ஆங்காங்கே அரசினர் தொடர்புள்ள தமிழ் அதிகாரிகளும் எழுத்தாளர்களும் செய்தித்தாள்களும் துணைநிற்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். ‘ஆரியர் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பர்’ என்ற முதுமொழியை நினைவூட்டி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாகவும், ஏமாளிகளாகவும் உள்ள தமிழ் மக்கள் இனியேனும் எல்லாத்துறைகளிலும் விழிப்புற் றெழுவார்களாக என்று பல்லாற்றானும் வலியுறுத்துகின்றோம்.

-தென்மொழி சுவடி : 3, ஓலை : 6, 1965