பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வடவரும் பார்ப்பனரும் நாமும்!

மிழகம் தனிப் பண்பாடும், மக்கள் வரலாறும், உலகிற்கே உயர்ந்த நாகரிகம் கற்பிக்கும் ஒப்புயர்வற்ற ஒரு மொழி வரலாறும் கொண்ட ஒரு நாடு. இஃது இறுதிக் காலத்திலன்றிப் பிறிதோர் இனத்திற்கு எப்பொழுதும் அடிமைப்படாத நிமிர்ந்த அரசியல் வரலாறு கொண்டது. இந்திய வரலாற்றை எழுதிய ஆரியச் சார்பினரும் பிற மேனாட்டினரும் இதன் வரலாற்றைத் தனியே ஆய்ந்தும், நடுநிலையோடும் இதுவரை எழுதவில்லை. எழுதிய சிலரும் வரலாற்றுக்கு அடிப்படையான மொழி, இனம், பண்பாடு, நாகரிகம் என்ற வரலாற்றுப் பாகுபாட்டின் அடிப்படையில் எழுத முற்படவே இல்லை; எனவே இந்தியப் பண்பாடே தமிழகத்தின் பண்பாடாகவும், சமற்கிருதமே தமிழகத்து வழங்கும் மொழிகளுக்கெல்லாம் மூல மொழியாகவும், தமிழினம் ஆரிய இனத்தால் கலப்புற்ற ஓர் இனமாகவும், இதன் நாகரிகம் ஆரிய நாகரிகமாகவுமே காட்டப்பட்டு வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பெரிய சூழ்ச்சியினைக்கண்டு கொள்ளவும், விழிப்படையவும் இதனின்று விடுபடவும் தமிழர் இன்று முற்பட்டு விட்டனர். இனி, இதைத் தடுத்து நிறுத்த உலகத்தின் எந்த ஒரு மாந்த இனத்திற்கும், ஆட்சி வல்லாண்மைக்கும் ஆற்றல் இல்லை. இவை வெறும் சொற்களல்ல. உணர்ந்த உண்மை; முடிந்த முடிவு.

இந்தியாவில் இக்கால் நிலவிவருவது குடியரசாட்சியே என்றாலும், இந்தியு அரசியலை ஆட்டிப்படைக்கும் மாபெரும் ஆற்றல்கள் இரண்டு. ஒன்று வடவரின் அரசியல் வெறி. இரண்டு ஆரியப் பார்ப்பனரின் சமயவெறி, வடவரின் அரசியல் வெறியே