பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

பாஸ்கரத் தொண்டைமான்


மணக்கிறார். அவரிடம் சூரபன்மன் முதலிய அசுரர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் முறையிடுகின்றனர். அவரும் தேவர் துயர் தீர்க்கத் தான் ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். இந்த வாக்கைக் காப்பாற்றத்தான் ஐந்து திருமுகங்களோடு அதோமுகமும் கொள்கிறார், ஆறு திருமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களினின்றும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயுவும் அக்கினியும் ஏந்திவந்து சரவணப் பொய்கையில் சேர்த்து விடுகின்றனர். அப்பொய்கையில் பூத்த ஆறு தாமரை மலர்களில் இந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறுகின்றன. இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றனர். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கை வருகிறார். அம்மை, குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து தன் மார்பகத்தில் அணைக்கிறாள். ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள். அவனே கந்தன் என்றும் ஆறுமுகம் என்றும் அழைக்கப்படுகிறான்" என்று முருகன் திரு அவதாரக் கதையை விளக்குகிறார், அந்தப் புராண வரலாறு தெரிந்த நண்பர்.

இன்னும் இந்த புராண வரலாற்றை கச்சியப்பரது கந்த புராணத்திலேயே படித்த அன்பர் ஒருவர்,

அருவமும் உருவம் ஆகி
அனாதியாய், பலவாய், ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து
உதித்தனன் உலகம் உய்ய

என்ற பாட்டையே பாட ஆரம்பித்து விடுகிறார்.

'இந்தப் புராணம் - பாட்டுக்களை நான் நம்பத் தயாராயில்லை' என்கிறார் நான்காவது நபர். இந்த விவாதங்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான் இடைபுகுந்தேன்.