பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பாஸ்கரத் தொண்டைமான்



எஃகம் ஏந்திய
வேரலை வாய் தரு
சீரலைவாய் வரு
சேயைப் போற்றிப்

பாடி மகிழ்ந்திருக்கிறார்கள் பக்தர்கள். நாமும் அந்தப் பக்தர் கூட்டத்தில் கூடி நின்று வணங்கி எழுந்து மேல் நடக்கலாம்.

கார் வசதியோடு சென்றிருந்தால் அன்றே வடக்கு நோக்கிக் காரைத் திருப்பி விரைந்து செல்லலாம். அப்படி நூறு மைல் சென்றால் நாம் திருப்பரங்குன்றத்திற்கு வந்து சேரலாம். மதுரைக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் இருக்கிறது திருப்பரங்குன்றம்.

அங்கு ஓங்கி உயர்ந்து நிற்பது பரங்குன்று. அதனையே சிக்கந்தர் மலை என்பர் சாதாரண மக்கள். உண்மையில் கந்தன் மலைதான் அது. சமய வேறுபாடுகளைப் பெரிது பண்ணாத தமிழர் அம்மலை முகட்டில் முஸ்லீம் பெரியார் ஒருவரைச் சமாதி வைக்க அனுமதித்திருக்கிறார்கள். அதனால் தான் கந்தன் மலை நாளடைவில் சிக்கந்தர் மலையாக உருப்பெற்றிருக்கிறது. குன்றமர்ந்து உறையும் முருகன் இங்கு ஒரு பெரிய கோமகனாகவே வாழ்கிறான். சூரபதுமனை வென்ற வெற்றிக்குப் பரிசாகத்தானே அந்த தேவேந்திரன் தன் மகள் தேவசேனையை மணம் முடித்துக் கொடுக்கிறான். தேவர் சேனாதிபதியாக இருந்து போர்களில் வெற்றி பெற்றவன் இங்கு தேவசேனாபதியாகவே அமைகிறான். அக்கோமகன் கோயில் கொண்டிருக்கும் கோயிலும் பெரிய கோயில்தான். பலபடிகள் ஏறிக் கடந்தே அவன் சந்நிதிமுன் சென்று சேரவேணும். அங்கு மலையைக் குடைந்தமைத்த குடை வரையிலேதான் அவன் குடியிருக்கிறான். அவனை வணங்கித் திரும்பும்போது அடிவாரத்தில் உள்ள மகாமண்டபத்துத் தூண் ஒன்றில் தேவசேனையை மணந்து கொள்ளும் காட்சியையும் கண்டு மகிழலாம். இத்தலத்திற்கு வந்த சுந்தரர், அன்று முடியுடை வேந்தர் மூவரும் வந்து வணங்கிய தலம் என்பர். நாமும் இன்று முடியுடைவேந்தர் தாமே. ஆதலால் நாம் அம்மூவரைப் பின்பற்றி வணங்கி சரித்திர ஏடுகளில் இடம் பெறலாம் தானே.