பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

25



கவிஞனின் ஆத்திரம் அளவு கடந்தே போய்விடுகிறது. இப்படிப் பாடிய கவிஞன், பக்தன் வேறு யாரும இல்லை. படிக்காசுப் புலவன் தான்.

இடையறாத அன்பினாலும், வழிபாட்டினாலும், இறைவனை அடைய முயலும் பக்தர்கள் எல்லாம், அவனோடு சாந்தம், தாஸ்யம், ஸக்யம், வாத்சல்யம், மதுரம் என்னும் ஐந்து வகை பாவனைகளில், உறவு முறைகளில் ஒன்றை அமைத்துக் கொண்டு உறவாடி மகிழ்கிறார்கள். இறைவனும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற முறையில், இயன்ற பக்குவத்தில், தன் தெய்வீக வடிவங்களை அமைத்துக் கொண்டு அவர்களோடு பழகி வருகிறான். தன்னைத் தந்தையாகப் பாவிப்பவர்களுக்கு தந்தையாகவே இருக்கிறான். தோழனாகப் பாவிப்பவர்களுக்கு அவன் தோழனே. நாயகனாகப் பாவிப்பவர்களுக்கு நாயகனாக இருப்பவனே, குழந்தையாகப் பாவிப்பவர்களுக்கு குழந்தையாக மாறி விடுகிறான்.

சமயகுரவரில் ஒருவரான ஞானசம்பந்தர் தன்னை இறைவனது சேயாகப் பாவித்துப் பழகத் தெரிந்திருந்தார். இறைவனையே தன் சேயாகப் பாவிக்கும் பாவனை பெற்றிருந்த பக்தர்களும் பலர். ஏன், தமிழ்நாட்டில் எழுந்த பிள்ளைத் தமிழ் எல்லாம் இறைவனை பக்தன் குழந்தையாகப் பாவித்து வழிபடும் முறைதானே. இந்த உறவு முறையில் எவ்வளவோ ஈடுபாடுகள் எல்லாம் உண்டு. குழந்தையை எடுத்துக் கொஞ்சலாம், முத்தமிடலாம், கன்னத்தைக் கிள்ளலாம். கோபித்துக் கொள்ளலாம். ஏன், அடியும் உதையும் கூட அதனிடத்தில் பெறலாம். இன்னும் என்னென்னவோ அருமையான பாவனைகளை எல்லாம் அனுபவிக்கலாம்.

இந்த ரகஸ்யங்களை எல்லாம் தெரிந்து தானே, நமது முன்னோர்கள் இறைவனைக் குழந்தை வடிவிலே வழிபட்டு இருக்கிறார்கள். விரிந்த உலகங்கள் யாவையும் தன்னுள் அடக்கிக் காக்கும் மாயவனாகிய திருமாலைப் பச்சிளங் குழந்தையாகக் கொண்டாடுவதில் தானே இன்பங் காண்கிறோம் நாம். குழந்தை முருகனைக் கொண்டாடும் முறையும் இப்படித்தான். இதைத்தான் பார்த்தோமே படிக்காசுப் புலவர் பாடலில் மேல்நாட்டு அறிஞர்களும் கிறிஸ்துவை அன்னை மேரியின் அருமைப் பிள்ளையாகத் தானே