பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

27


எடுத்துப் பாலூட்டி வளர்க்கிறார்கள். அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி சேர்த்து அணைத்து எடுத்த போது கார்த்திகேயன் ஆறுமுகனாக உருப்பெறுகிறான். பேரொளி படைத்தவன், அடியார்க்கு எளியவன். வேள்வி காவலன், ஞான பண்டிதன், வீரப் பெருமகன், இன்பத் தலைவன் எல்லாம் அவனே என்று புலப்படுத்தவே, அவனது ஆறு திருமுகத்தைக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள் நமது முன்னோர். அப்படி எல்லாம் விளக்கம். கூறுவதைவிட இந்த அறுமுகவன், அழகனாக, குமரனாக மக்கள் உள்ளத்தில் எப்படி உருப்பெறுகிறான் என்பதை தமிழ் மக்களது இறை உணர்வு வளர்ந்த வரலாற்றிலேயே தெரிந்து கொள்ளலாம் தானே!

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த’வர்கள் தமிழ் மக்கள். அந்தப் பழங்குடி மக்கள் உண்ணத் தெரிந்திருக்கிறார்கள் உறங்கத் தெரிந்திருக்கிறார்கள்; உடுக்கத் தெரிந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் ஓர் அமைதி நிலவி இருக்கிறது. ஆனால் இந்த அமைதியைக் குலைத்திருக்கிறது இயற்கையில் எழுந்த இடியும் மின்னலும், ஆற்றில் புரண்ட வெள்ளமும், காற்றில் தோன்றிய கடுமையும். அவர்கள் வாழ்க்கைப் படகே ஆட்டம் கொடுத்திருக்கிறது. சுழற் காற்றையும் சூறாவளியையும் குமுறும் நிலத்தையும் கண்டு பயந்திருக்கிறார்கள் இந்தப் பயத்திலே பிறந்திருக்கிறது இறை உணர்வு.

இந்த உலகிலே காணும் நிலம், நீர், அனல், காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் பயங்கர நிலையைக் கண்டு அஞ்சி, அஞ்சியே இறைவனை நினைந்திருக்கிறார்கள். முதலில் அஞ்சி வழிபட்ட ஐம்பூதத்தின் சாந்த நிலையைக் கண்ட பின் தான். அன்பு பிறந்திருக்கிறது அவர்கள் உள்ளத்திலே. உலகின் நன்மைக்கெல்லாம் காரணமாய் இருக்கும் ஆதவன், அவன் ஒளியிலே பங்கு பெற்று அவன் வெம்மையைக் குறைத்து, தண்மையையே அளிக்கும் சந்திரன், இரண்டிற்கும் அடுத்தபடியாக ஆக்கவும் அளிக்கவும் உதவும் அனல், இவற்றையே கொடிநிலை, வள்ளி, கந்தழி என்றெல்லாம் பெயரிட்டு வணங்கியிருக்கிறார்கள். இப்படி உருவான இறை உணர்ச்சியிலேயும் ஒரு குறை என்றுமே இருந்துவந்திருக்கிறது. உண்ணத் தெரிந்ததோடு, உடுக்கத் தெரிந்ததோடு வாழ்வு பூரணமாகவில்லை என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் நீண்டு உயர்ந்த