பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

59


ஆடிப் பாடுவதையும் முருகன் காட்சி தருவதையும் விளக்குகிறார் நக்கீரர். பின்னர் திருச்செந்தூரில் முருகன் கடல் அருகே கவின்பெற விளங்கும் தன்மையையும், யானையின் மேல் ஏறிவந்து தரிசனம் கொடுப்பதையும், ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களும் உடைய அவன் திருக்கோலத்தையும் சொல்கிறார் கவிஞர். மூன்றாவதாக ஆவினன்குடியில் அந்த முருகன் அற்புதக் கனியாக விளங்குவதையும் முனிவர் கந்தருவர் முதலியவர்கள் சென்று வழிபடும் முறையையும் விரிவாகவே கூறுகிறார் நல்லிசைப் புலவர். நான்காவதாக திருவேரகத்தில், பிரணவப் பொருளறியாத பிரமனை குட்டிச் சிறை இருத்தி, தன் தந்தையாம் சிவபெருமானுக்கும் பிரணவப் பொருள் உணர்த்தும் ஞானாசிரியனாக நிற்கும் முருகன் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான். மேலும் குன்றுதோறாடல் என்னும் ஐந்தாம் பகுதியிலே குன்றுகள் தோறும் முருகன் எழுந்தருளி உலக மக்களுக்குக் காட்சி கொடுப்பதையும், அங்கெல்லாம் குன்றவர் குரவை ஆடி மகிழ்வதையும் விளக்குகிறார் நக்கீரர். கடைசியாக பழமுதிர் சோலைக்கு அழைத்துச் சென்று அந்த மலை கிழவோனை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு விடை பெற்றுக் கொள்கிறார்.

இதற்கெல்லாம் பீடிகையாக நம்மைப் பார்த்து ‘அன்பர்களே அளவிடற்கரிய புகழுடையவனும், சிவந்த வேலை ஏந்தியவனுமான முருகன் திருவடிகளை தூய சிந்தையோடு நினைந்து அவனிடம் போவதை நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பம் திட்டமாய் நிறைவேறும்’ என்றும் கூறுகிறார்.

எய்யா நல்இசை செவ்வேல் சேய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கை புலம் புரிந்து உரையும்
செலவு நீ நயந்தனையாயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே

என்று நல்லாசி கூறுகிறார் நக்கீரர். இதை எல்லாம் தெரிந்து கொண்டபின், நக்கீரர் கண்ட முருகன் என்ற தலைப்பிலே ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு நான் கூறினால் விஷயம் தெளிவாகும். அத்தோடு முருகாற்றுப்படை படித்துப் பாராயணம் பண்ணவும் ஓர் ஆசையே பிறக்கும் அல்லவா?