பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பாஸ்கரத் தொண்டைமான்


குமரனையே. முருகை உடையவன் முருகன். முருகன் என்றால் மணம், இளமை, கடவுட் தன்மை, அழகு எல்லாம் சேர்ந்தது என்று அறிவோமே. அழகு உள்ளவனிடத்தே மணம், இளமை, இறைமை எல்லாம் கலந்தே நிற்கும், அதிலும் அழியா அழகு பெற்றவனாக, என்றும் இளையவனாக ஒருவன் அமைந்துவிட்டால் அதைவிட பெறற்கு அரிய பேறு ஒன்று உண்டா? அத்தகைய பேறு உடையவனாக அல்லவா ஒரு கடவுளை உருவாக்கி இருக்கிறான் தமிழன். கலைஞனான மனிதனின் அழகுணர்ச்சிதான் என்ன என்ன காரியங்களை சாதித்திருக்கிறது? உருவமே இல்லாத கடவுளுக்கு உருவத்தை கற்பித்திருக்கிறது. அக்கற்பனைக் கடவுளை முருகனாக, குமரனாகக் கண்டு தலைவணங்கியிருக்கிறது. அத்தகைய அழகுணர்ச்சி நிறைந்த கலைஞன் பரம்பரையில் வந்தவர் தானே அருணகிரியார். அவர் குமரனின் அழகில் மயங்கி அதையே வியந்து வியந்து பாடியதில் வியப்பில்லையே.

இறைவன் படைத்த இயற்கைதான் எவ்வளவு அழகுடையது. விரிந்து பரந்திருக்கும் வானம், அகன்று ஆழ்ந்து கிடக்கும் கடல், அக்கடல் உள்ளிருந்த எழும் இளஞ்சூரியன், அச்சூரியனிடமிருந்து ஒளி பெற்று அதை உலகுக்குத் திரும்பவும் வழங்கும் குளிர்நிலா, அந்நிலாவோடு தோழமை பூண்டு மின்னி மினுக்கும் விண்மீன்கள் எல்லாம் அழகைத்தானே வாரி வழங்குகின்றன. பூமியில் உள்ள மலை, மலையிலிருந்து விழும் அருவி, அருவி ஓடிப் பெருகும் ஆறு, ஆற்றங்கரையில் நின்று நிழல் தரும் மரங்கள், அம்மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்கள், கனிகள், பரந்த வயல்களிலே பச்சைக் கம்பளம் விரித்தால் போல் இலங்கும் நெற்கதிர்கள், புல்பூண்டுகள், ஊர்வன, பறப்பன. நடப்பன எல்லாமே இயற்கை அன்னையில் அழகு வடிவந்தானே. இவைதானே மனிதனால் கை புனைந்து இயற்றாத கவின்பெறு வனப்பு. இந்த வனப்பில் தானே கலைஞர்கள் எல்லாம் உள்ளம் பறிகொடுத்து நிற்கின்றனர். அப்படி உள்ளம் பறிகொடுத்த ஒரு கவிஞன் தான், முற்றிய ஆழியிலே அலைவந்து மோதி எறிகையிலே கற்றைக் கதிர் எழும் காட்சியைக் கண்டிருக்கிறான். உலகம் உவப்ப, பலர் புகழ் ஞாயிறு கடற்கண் எழும் காட்சியிலே அழகைக் கண்டிருக்கிறான் இளமையைக் கண்டிருக்கிறான்; இறைமையைக் கண்டிருக்கிறான். விரிந்திருக்கும் நீல வானம் நீலநிறத் தோகையை விரித்தாடும் மயிலாகக் காட்சி அளித்திருக்கிறது. அந்த