பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பாஸ்கரத் தொண்டைமான்



அழகுக்கு அழகு செய்வார்? என்பதை அறிந்தவர்தான் என்றாலும் ஆசை யாரைவிட்டது. எத்தனையோ திருப்புகழ் பாடி அவன் புகழ் பரப்பிய அருணகிரி, தான் பெற்ற பெறற்கரிய அனுபவங்களையெல்லாம் அனுபூதியாகப் பாடி உலகோர்க்கு விளக்கிய அவர் முருகனை அலங்கரித்து மகிழ்வதிலேதான் உள்ள நிறைவு பெற்றிருக்கிறார். அந்த அலங்காரங்களைப் பாடி அரிய பாமாலை ஒன்றையே சாத்தியிருக்கிறார். ஆம் அவர் அறிவார். அலங்கரிப்பதற்கு பொன்மாலையோ அல்லது பூமாலையோ வேண்டும் என்பதை. ஆனால் பொன் மாலைக்கு மணம் கிடையாதே, பூமாலை வாடிவிடுமே என்று உணர்ந்தே பாமாலை கொண்டு அழகனின் பதம் பணிய விரைந்திருக்கிறார்.

அழகன் ஆன குமரனை நினைத்தவர், அந்த அழகனைப் பெற்றெடுத்த அன்னையை, அழகே உருவான அப்பன் சொக்கனை எல்லாம் நினைத்திருக்கிறார். ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனாக ஆற்றைப் பணியை, இதழியைத் தும்பையை, அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரனாக முருகனைத் தொழந்துவங்கியவாறே அவன்தன் துணைவி அந்தக் கள்ளக் குறமகள் வள்ளியையும் நினைந்து நினைந்து துதித்திருக்கிறார். தேனென்று பாகென்று உவமிக்கொணா தெய்வ வள்ளி என்று போற்றுவார் ஒருதரம். நெற்றாப் பசுங்கதிர் செவ்வேனல் காக்கிற நீலவள்ளி என்று வர்ணிப்பார் மறுதரம், மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் என்று குறிப்பதோடு மட்டும் திருப்தி அடையாது, வேடிச்சி கொங்கை விரும்பும் குமரன் என்றும் கூறி மகிழ்வர். இந்த மயில் வாகனனைக் கண்டு தொழ, அவர் மலைமீது ஏறி இருக்கிறார். கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். காடு, வயல், சோலை எல்லாம் கடுகி நடந்திருக்கின்றார். அழகு குடி கொண்ட அங்கெல்லாம் இருக்கும் அழகனை நாமும் காண நம்மையுமே உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் அழைத்துச் சென்ற இடங்கள் அத்தனைக்கும் நானும் உங்களை இழுத்தடிக்க விரும்பவில்லை. அவன் பாடிய அலங்காரத்திலேயே சிறப்பான இடம் பெறுபவை மூன்றுதானே. அந்த மூன்றிடங்களுக்கு மட்டுமே இன்று போகலாம் நாம்.

முருகன் செய்த அருஞ்செயல் அத்தனையிலும், பெரும்புகழ் உடையது சூரன் உடல் அற வேலை விட்ட காரியம்தானே.