பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

பாஸ்கரத் தொண்டைமான்


3. குமரகுருபரர் கண்ட குமரன்

ஒரு தந்தை, வயது முப்பது முப்பத்தைந்து இருக்கும். நல்ல கட்டான உடல், அடர்ந்து வளர்ந்த மீசை ஏதோ கண் பார்வை குறைந்ததினாலோ அல்லது தீராத தலைவலி என்னும் நோய்க்காகவோ, கண்ணாடி வேறே அணிந்திருக்கிறார். அவருக்கு ஒரு வயது நிரம்பிய ஒரு சிறு பாலகன். இரண்டு பெண்கள் பிறந்த பின் பிறந்த ஆண் மகன் ஆனதால், அந்தச் சிறு குழந்தையிடத்திலே அளவு கடந்த பாசம். நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும் பையனை மார்போடணைத்தே வளர்க்கிறார். ஆனால் பையனோ சிறு குறும்பு செய்வதில் படுசுட்டி, தந்தையின் மார்பில் ஏறியதுமே மீசையைப் பிடித்து அசைப்பான் கன்னத்தில் அறைவான். கண்ணாடியை இழுத்து எறிந்து உடைப்பான். இத்தனை குறும்பையும் அவன் இடைவிடாது செய்தாலும் அந்தப் பிள்ளையிடத்திலே அளவற்ற பாசம்தான் தந்தைக்கு திரும்பத் திரும்பக் கண்ணாடி உடைந்தாலும், மீசை மயிர் பிய்ந்தாலும், கன்னத்தில் அறை ஓங்கியே விழுந்தாலும் குழந்தையைக் கொஞ்சுவதைத் தந்தை நிறுத்தவில்லை. இது நாம் வாழ்வில், பல தடவை காணும் காட்சி. ஏன்? நாமே பெறும் அனுபவமும் தான், நமக்கு மீசை இல்லாவிட்டாலும் கூட.

இது சாதாரணத் தந்தை ஒருவரின் அனுபவம். இறைவனாம் தந்தைக்கும் இதே அனுபவம் உண்டு. அதிலும் பிள்ளைச் சிறு குறும்பு பண்ணுபவன் குமரன் என்னும் படுசுட்டியாக இருந்து விட்டால்? இந்த தந்தையோ சாதாரணத் தந்தையல்ல. இரு கைகளுக்குப் பதிலாய் நான்கு கைகள் உடையவராக இருக்கிறார். ஒரு கையிலோ துடி, ஒரு கையிலோ அனல், ஒரு கையிலோ மான், தலையில் இருக்கும் சடாமகுடத்திலோ கங்கை, அத்தோடு இளம்பிறையும், படமுடைப்பாம்பும். வேறே முடிப்பதற்கு பூ என்றும் ஒன்றும் கிடையாது போகவே அறுகம்புல்லை வேறே தன் தலையில் உள்ள சடையில் அணிந்திருக்கிறார். இந்தத் தந்தை தன்னிடம் தவழ்ந்து ஓடிவரும் அருமைக் குமரனை அன்போடு எடுக்கிறார். மார்போடு சேர்த்து அணைக்கிறார். பிள்ளையோ குறும்புக்காரப் பிள்ளை. தந்தையின் மார்பில் குரவையே ஆட ஆரம்பித்து விடுகிறது. அதனால் நீறு அணிந்த அவருடைய செம்மேனியோ அப்படியே புழுதிபடுகிறது. இத்தோடு விடுகிறதா குழந்தை? அவர் கரத்தில் உள்ள உடுக்கையை சிறு பறை எனத் தட்டி முழக்குகிறது.