பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதவியால் ஈழ நாட்டில் வெற்றி கொண்டான். இவனது படைத் தலைவரே பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்ட நாயனார். திருச்சிராப்பள்ளி மலையிலும் பிற இடங்களிலும் இவன் குடைவித்த கோவில்கள் சிலவற்றைக் காணலாம்.

முதலாம் பரமேசுவர வர்மன் (கி.பி.670-680)

இவன் இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனைப் பெருவளநல்லூர் என்னும் இடத்தில் கடும் போர் புரிந்து தோற்கடித்தான். பரமேசுவரன், நர சிம்மன் தொடங்கிய ஒற்றைக்கற் கோவில்களை மாமல்லபுரத்தில் அமைத்து முடித்தான். ‘பஞ்ச பாண்டவர் இரதங்கள்' என்று சொல்லப்படுவனவே இவர்கள் அமைத்த ஒற்றைக்கற் கோவில்கள்.இப்பரமேசுவரன் சிறந்த சிவபக்தன்; உருத்திராக்கத்தால் சிவலிங்க வடிவில் மணி முடி செய்து தரித்துக்கொண்டவன்; சிறந்த வடமொழிப் புலவன். இவன் காஞ்சிக்கு ஏழுகல் தொலைவிலுள்ள கூரம் என்னும் ஊரில் சிவன் கோவிலைக் கட்டினான். அக் கோவிலுக்கு முதன் முதல் அடிப்படையாகக் கருங் கற்களைப் பயன்படுத்தினான்.

இராச சிம்மன் (கி.பி.680-720)

பரமேசுவரன் மகனான இவன் காஞ்சியில் கருங் கற்களைக் கொண்டு கயிலாசநாதர் கோவிலைக் கட்டினான். முழுமையும் கற்களாலாகிய முதற் கோவில் இதுவே யாகும். கயிலாசநாதர் கோவில் சிறந்த கலைக் கூடம் என்னலாம். இது போன்ற சிறிய கோவிலை இப்பேரரசன் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அமைத்தான். இவன் காலத்தில் கொடிய பஞ்சம் தொண்டை நாட்டில் ஏற்பட்டது. இவனது அவையில் தண்டி என்ற வடமொழிப் புலவர் இருந்தார். அவர் அவந்தி சுந்தரி கதா, காவியாதரிசம் என்ற வடமொழி நூல்களை எழுதியுள்ளார். அக்காவி யதரிசமே தமிழில் தண்டியலங்காரம் எனப்படுகிறது.15