பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. காவிரிக் கரை நாகரிகம்

1. காவிரியாறு

இலக்கியத்தில் காவிரி

மணிமேகலை

காவிரியாறு குடகுநாட்டில் தோன்றுகின்றது; மைசூர் நாடு, கொங்கு நாடு, சோழ நாடு ஆகிய நாடுகளில் பாய்ந்து வளம் பெருக்குகின்றது. காவிரியாறு சோழ நாட்டில் பல கிளையாறுகளை உண்டாக்கிக்கொண்டு அந் நாட்டை வளம் மிக்க நாடாகச் செய்துள்ளது. எங்கு நோக்கினும் ஆறுகள், வாய்க்கால்கள், நீர்நிலைகள் என்று கூறும் அளவில் சோழ நாடு இருத்தல் காவிரியாற்றுப் பாய்ச்சலினால்தான் என்பது அறியத் தகும். பல நாடு களின் வழியாகப் பாய்ந்து வந்தாலும், சோழநாடே அத னால் முழு நன்மையைப் பெறுவதால், 'காவிரி சோழ நாட்டுக்கே தனி உரிமை உடையது' என்று புலவர் காவிரியாற்றினைப் போற்றினர். மணிமேகலை ஆசிரிய ராகிய சீத்தலைச் சாத்தனார் காவிரியாற்றினை,

பாடல்சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய

கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி

என்று பாராட்டியுள்ளார்.

சிலப்பதிகாரம்

காலம் அறிந்து அமுதூட்டி மக்களை மகிழ்விக்கும் தாய்போலக் காவிரியாறு, பயிர் விளையும் காலம் அறிந்து தன் வளம் சுரந்து காக்கின்றது என்பதைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்,

வாழி அவன் தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி

என்று கூறி விளக்கியுள்ளார். காவிரியாறு அளிக்கும் வளங்களைக் காண்போம்:

39