I. முன்னுரை
ஐவகை நிலம்
நாம் வாழும் நிலத்தில் மலைகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் இருக்கின்றன; காடுகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் உள்ளன ; ஆற்றுப் பாய்ச்சல் மிகுந்த வயல்களும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் இருக்கின்றன; கடலும் கடல் சார்ந்த பகுதியும் உள்ளன. இவ்வாறு நால்வகை நிலப்பகுதிகளைக் கொண் டிருப்பதாற்றான் இந்நிலத்திற்கு நானிலம் என்னும் பெயர் உண்டாயிற்று. எவ்வகை நீர்வளமும் இல்லாமல் வறண்ட பகுதிகளும் சில இடங்களில் உள்ளன. இந்த ஐவகை நிலங்களையும் தமிழ்த் தொல்லாசிரியர் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அழைத்தனர். குறிஞ்சி நிலம்
மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலப் பகுதியில் மக்கள் அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும்; வயல் வளம் அற்ற அப்பகுதியில் அவர்கள் மிகுதியாகப் பயிர் செய்தல் இயலாது; எனவே, அப்பகுதியில் விளையத் தகும் தினை முதலிய தானியங்களை மிகுந்த பாடுபட்டுப் பயிராக்குதல் வேண்டும்; சில கிழங்கு வகைகளைப் பயிராக்கலாம்; தேன் சேர்க்கலாம்; விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடலாம். இங்ஙனம் வயிற்றுப் பிழைப்புக்கே அரும்பாடுபட்டால்தான் அங்கிருப்போர் வாழ்தல் இயலும். இந்நிலையில் அவர்களிடம் சிறந்த ஆடை அணிகளையோ, உயர்ந்த உணவு வகைகளையோ, பண்பட்ட கலைகளையோ எதிர்பார்த்தல் இயலாது.
5