ஏற்ப, வாலியின் மனைவியான தாரையைச் சித்திரித்துக் காட்டியுள்ளார். கிஷ்கிந்தா காண்டத்தில் கூறப்பட்டுள்ள கார்கால வருணனை தமிழகத்துக் கார்கால வருணனையே யாகும்.
கம்பர் தாம் பாடிய இராமாயண நூலில் 10,500 பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் சொற்செறிவும் பொருட்செறிவும் கொண்டவை; பலவகை அணிகளைக் கொண்டவை. கம்பருடைய பரந்த உலக அறிவு, தமிழ் நாட்டு அறிவு, வைணவ சமய அறிவு, சமய சமரச மனப் பான்மை என்பனவற்றை நன்கு விளக்கவல்லவை. இத்தகைய சிறப்புக்களாலேதான் இப்பெரு நூல் எல்லாச் சமயத்தவராலும் படித்துப் பாராட்டப் பெறுகின்றது; "கல்வியிற்பெரியவர் கம்பர்' என்றும், 'கவிச் சக்கர வர்த்தி' என்றும் அறிஞர் கம்பர் பெருமானைப் பாராட்டு வாராயினர். அறிஞர் பலர் காவிய நயத்திற்காகவே இதனை இன்றும் விரும்பிப் படிக்கின்றனர். தமிழ் இலக்கியவான வெளியில் கம்பர் இணையற்ற கதிரவனாகக் காட்சி அளிக்கின்றார் என்பதில் ஐயமில்லை.
மடங்களின் தமிழ்த் தொண்டு
சோழப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்பு, தமிழ் வளர்க்கும் கடமையைச் சைவ மடங்கள் மேற்கொண்டன. மாயூரத்தை அடுத்த தருமபுர ஆதீனம், திரு ஆவடுதுறை ஆதீனம் என்பவை குறிக்கத்தக்கவை. தருமபுர ஆதீனம் சிவநெறி நூல்களை வெளியிட்டது. திரு ஆவடு துறை ஆதீனம் சிவநெறி நூல்களையும் பிற தமிழ் நூல் களையும் வெளியிட்டது. இவ்வாதீனத்தைச் சேர்ந்த சங்கர நமச்சிவாயர் என்பவர் நன்னூல் என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதினார். இவருக்குப் பின்வந்த சிவஞான முனிவர் என்பவர் சங்கர நமச்சிவாயர் உரையைத் தழுவி விரிவுரை எழுதியுள்ளார் ; காஞ்சிப் புராணம் என்னும் அரிய செய்யுள் நூலைச் செய்துள்ளார்; 61