பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரவைகள் ஊர் வழக்குகளைத் தீர்த்து வந்தன. பெரிய வழக்குகளை அரசாங்க உயர் அலுவலர் விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர்.

பாண்டியர் இலச்சினை

கயல்மீன் பாண்டியர் இலச்சினையாகும். பாண்டியர் கொடியில் மீன் உருவமே தீட்டப்பட்டிருந்தது. கொற்கைத் துறைமுகத்தில் ஏற்றுமதியான பண்டப் பொதிகள் மீதும் இறக்குமதியான பண்டப் பொதிகள் மீதும் மீன் இலச்சினையே இடப்பட்டது. அரசாங்க ஆணைகள் மீதும் மீன் பொறியே பொறிக்கப்பட்டது. பாண்டியனுக்கு மீனவன், மீனக்கொடியோன் என்னும் பெயர்கள் வழங்கின.

நாணயங்கள்

பாண்டியர் காசுகள் பொன்னாலும் செம்பாலும் செய்யப்பட்டவை. அவற்றின்மீது மன்னரின் சிறப்புப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தன. அவனிவ சேகரன் கோளகை, சோணாடு கொண்டான், எல்லாம் தலையானான், வாளால் வழிதிறந்தான் என்பன போன்ற விருதுப் பெயர்களே பல நாணயங்களில் காணப்படுகின்றன. 'பொன்' என்பதும் 'காசு' என்பதும் நாணயங்களின் பெயர்கள். பத்துப் பொன் கொண்டது ஒரு காசு. விசய நகர வேந்தர் நாணயங்களும் நாயக்கர் நாணயங்களும் கொற்கை, காயல் முதலிய இடங்களில் கிடைக்கின்றன; சோழப் பேரரசர் காசுகளும் மிகுதியாகக் கிடைக்கின்றன. எனவே, இவை யாவும் பாண்டிய நாட்டில் அவரவர் ஆட்சிக் காலத்தில் வழங்கி வந்தன என்பது தெளிவு.

அளவைகள்

சோழநாட்டு அளவைகள் போன்றவையே பெரும்பாலும் பாண்டிய நாட்டிலும் வழங்கி வந்தன என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். சுந்தர பாண்டியன்86