யவனர்கள் மதுரைக் கோட்டை வாயில்களைக் காத்தனர் என்று புறநானூறு போன்ற தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. பாண்டிய நாடு கிழக்கு நாடுகளுடனும் மேற்கு நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தமைக்குரிய சான்றுகள் பலவாகும்.
உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடந்து வந்தது. உள்நாட்டில் வாணிகத்திற்குரிய பெருவழிகள் பல இருந்தன. பண்டங்களை ஏற்றிச் செல்லக் கோவேறு கழுதைகளும், வண்டிகளும், எருதுகளும் பெரிதும் பயன்பட்டன. வழியில் களவு நிகழாதபடி காக்கக் குறிப்பிடத் தக்க இடங்களில் காவற் படைகள் வைக்கப்பட்டிருந்தன. வணிகர் கூட்டமாகச் செல்வது வழக்கம். அக்கூட்டத்திற்கு 'வாணிகச் சாத்து' என்பது பெயர். வணிகருள் சிறந்தோர்க்கு 'எட்டி' என்ற பட்டம் மன்னரால் வழங்கப்பெற்றது.
கல்வி
'ஒரு தாய் தன் பிள்ளைகளுள் கற்றவனையே பெரிதும் விரும்புவாள். ஒரு குடும்பத்தாருள் கற்றவனது யோசனையையே அரசனும் கேட்பான். கற்றவன் ஒருவன் தாழ்ந்த நிலையில் இருப்பினும், அவனிடமே மேல் நிலையில் இருப்பவனும் அறிவுரை கேட்பான். இங்ஙனம் குடும்பத்திலும், சமுதாயத்திலும், நாட்டிலும் கற்றவனே சிறப்புப் பெறுவான். ஆதலால் எப்பாடுபட்டாயினும் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும்,' என்னும் பொருள் கொண்ட செய்யுள் ஒன்றை நெடுஞ்செழியன் பாடியுள்ளான். பாண்டி மன்னர் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தனர். மன்னரே கல்வியில் இத்தகைய ஊக்கம் காட்டிய காரணத்தால், ஆடவர் பெண்டிர் அனைவரும் கல்வி கற்றனர்; குறத்தி, வேட்டுவச்சி, வளமனையைக் காத்த காவற் பெண்டு இன்ன பிறரும் பைத்தமிழைப் பாங்குறக் கற்றனர்.88