உருவங்கள் பொறிக்கப் பெற்றமையால் சிற்பத் தொழில் சிறந்து விளங்கியது. கோவிற் சுவர்களில் புராணக் கதைகள் ஓவியங்களாகத் தீட்டப் பெற்றமையால் ஓவியக் கலை ஓங்கி வளர்ந்தது. சமயத் தொடர்பான பாடல்களைப் பாட இசைவாணிகளும் நடனமாட ஆடுமகளிரும் கோவில்களில் இடம் பெற்றிருந்தனர். இவ்வாறு கோவில்களால் பொதுமக்களிடம் பக்தி வளர்ந்ததோடு, கட்டடக் கலையும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இசைக் கலையும் நடனக் கலையும் நன்கு வளர்ச்சி பெற்றன.
கோவில்களில் நூல்நிலையங்கள் இருந்தன ; தேவாரப் பள்ளிகளிருந்தன. கோவில் சில சமயங்களில் நீதிமன்ற மாகவும் பயன்பட்டது; போர்க்காலத்தில் மக்கள் தஞ்சம் புகும் பாதுகாப்பிடமாகவும் பயன்பட்டது. சுருங்கக் கூறின், ஊர் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் கலைநிலையமாகயும் சமய நிலையமாகவும் பாதுகாப்பிடமாகவும் கோவில் பயன்பட்டது.
4. இலக்கியச் சிறப்பு
பாண்டியரும் பைந்தமிழும்
பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர்; அத்துடன் நில்லாது பைந்தமிழைப் பாங்குறப் பயின்று பாவலராகவும் விளங்கினர். பூதப்பாண்டியன், நெடுஞ்செழியன், இளம் பெருவழுதி, பாண்டியன் அறிவுடை நம்பி முதலிய பாண்டிய மன்னர்களின் பாடல்கள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு பாடிய பாடலொன்றும் புறநானூற்றில் உள்ளது. இங்ஙனம் பாண்டியரும் பைந் தமிழும் இணைந்து வளர்ந்த காலமே சங்ககாலம் என்று சொல்லலாம்.90