பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக்க இப்பெரும் புலவர், அஞ்சா நெஞ்சம் மிக்கவர்; 'நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என்று சிவபெருமானை அஞ்சா நெஞ்சத்துடன் நோக்கிக் கூறியவர். இவர் திருமுருகாற்றுப்படை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவரைப் பற்றிய விரிவான வரலாறு திருவிளையாடற் புராணத்தில் உள்ளது.

சமணர் சங்கம்

பாண்டிய நாட்டில் இருந்த சமணர்கள் ஒன்றுகூடிக் கி.பி.5ஆம் நூற்றாண்டில் மதுரையில் சங்கம் ஒன்று அமைத்தனர். நாலடியார் போன்ற அறிவுரை நல்கும் நூல்கள் இக்காலத்தில் அரங்கேற்றப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். நானூறு சமண முனிவர்கள் அறம், பொருள், இன்பம் பற்றி இயற்றிய நானூறு பாடல்களின் தொகுதியே நாலடியார் என்னும் நூல். இந்நூல், தான் என்ற செருக்கில் சிக்கித் தன் வாழ்வை அவலமாக்கிக் கொள்ளும் மனிதனுக்கு நல்லறிவு புகட்டி அவனை நல்ல நெறியில் உய்விக்கும் சிறப்புடையது.

இன்றைய தமிழ்ச் சங்கம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்தவரும் பாலவனத்தம் சமீந்தாரும் ஆகிய பாண்டித்துரைத் தேவர் என்பவரால் மதுரையில் புதியதொரு தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தில் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்ற மூன்று வகுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன ; மிகச் சிறந்த நூல்நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் செந்தமிழ் என்னும் திங்கள் இதழ் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் பொன்விழா மதுரைப் பெருநகரில் தமிழகத்தில் உள்ள பலதுறை வல்ல அறிஞர்களின் சொற்பொழிவுகளுடனும் இசை, நாடகம் முதலிய கலை விருந்துகளுடனும் 1956ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாள் முதல் சூன் திங்கள் 5ஆம் நாள் முடிய 92