ஒரு வார காலம் சிறப்பாக நடைபெற்றது. பல மாற்றங்கள் செய்யப்பட்டுச் சங்கத்தின் சார்பில் செந்தமிழ்க் கல்லூரி ஒன்று தொடங்கிப் பலர்க்கும் தமிழறிவு புகட்டத் தமிழ்ச் சங்கச் செயற்குழுவினர் தலைப்பட்டுள்ளனர்.
சங்க நூல்கள்
பாண்டிய அரசர்களுள் சிறப்புடையவனாக விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மாங்குடி மருதனார் என்னும் மூன்று பெரும் புலவர்கள் முறையே முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி என்னும் மூன்று நூல்களைப் பாடியுள்ளனர்.
முல்லைப் பாட்டு
தலைவன் நெடுஞ்செழியன் போரை முன்னிட்டுத் தன் நாட்டை விட்டுப் புறப்பட்டான். அவன் தன் மனைவியிடம் 'யான் வருமளவும் ஆற்றியிரு' என்று கூறிச் சென்றான். அவன் பகைவரைப் பொருது அடக்கப் போருக்குச் சென்ற பின்னர்த் தலைவி வருந்துதலும், அவன் வினை முடித்து வருதல் உறுதி, நீ வருத்தம் தவிர்க' என்று முதுபெண்டிர் கூறுதலும், அது கேட்ட அவள் தலைவன் வந்த பின்பு உண்டாக இருக்கும் நல்வாழ்க்கையை எண்ணிப் பார்த்து அமைதியாயிருத்தலும், தலைவன் போர் முடித்து வருதலும், அதுகண்டு தோழி முதலானோர் தம்முட் கூறுதலும் ஆகிய செய்திகள் இந்நூலுள் உள்ளன.
மதுரைக் காஞ்சி
பாண்டியர் சிறப்பு, நெடுஞ்செழியனது போர்த்திறன், பாண்டிய நாட்டுப் பெருமை, மதுரை மூதூரின் மாண்பு, வீடுபேறு விரும்பும் வேந்தனது செயல்முறை முதலியன மதுரைக் காஞ்சி என்னும் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. 93