சங்கு, ஆழி முதலியவற்றின் சிறப்பு, அவனைப் பக்தர்கள் வழிபடும் முறை, அப்பெருமான் அடியவருக்கு அருளும் திறன் முதலியன திருமால் பற்றிய பாடல்களில் நன்கு குறிக்கப்பட்டுள்ளன. பதிற்றுப் பத்து என்னும் நூல் சேரர்க்கு அமைந்தாற் போலவே, பரிபாடல் என்னும் இந்நூல் பாண்டியர்க்காகவே அமைந்தது என்று கூறலாம்.
சமய நூல்கள்
இடைக் காலத்தில் மதுரை, திருப்பூவணம் முதலிய பாண்டிய நாட்டுச் சிவத்தலங்கள் பதினான்கின் மீதும் பாடப் பெற்ற திருமுறைப் பாடல்களை சைவ இலக்கியம் என்று சொல்லலாம். திருவாசகத்தின் பெரும் பகுதி பாண்டிய நாட்டிலேதான் பாடப்பட்டது. இப்பாக்களால் பல்லவர் காலத்தில் பாண்டிய நாட்டு ஊர்கள், கோவில்கள், சைவ சமயம் பற்றிய செய்திகள் விளக்கமாகின்றன. இவ்வாறே பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் முதலிய பாண்டிய நாட்டு ஆழ்வார்கள் அருளிச் செய்த பாடல்கள், பாண்டிய நாட்டு வைணவத் தலங்களின் அமைப்பையும் சிறப்பையும் வைணவ சமயத்தின் கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் நன்கு தெரிவிக்கின்றன.
கல்லாடம்
கல்லாடர் என்னும் இடைக்காலப் புலவர் இந்நூலைப் பாடியுள்ளார். பாண்டிய நாட்டுத் தலங்களின் சில விவரங்களும் மதுரை மாநகரின் விவரங்கள் பலவும் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பலவும் இத்நூலில் இடம் பெற்றுள்ளன.. இடையிடையே சைவ சமயக் கொள்கைகள், மக்கள் பழக்க வழக்கங்கள் முதலியனவும் இதனில் குறிக்கப்பட்டுள்ளன.95