திருவிளையாடற் புராணம்
மதுரையில் சிவபெருமான் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் புராணங்கள் இரண்டு தமிழில் உண்டு. இவற்றுள் காலத்தால் முற்பட்டது நம்பி திருவிளையாடல் என்பது. பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் இந்நூலைச் செய்தவர். இஃது ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுட்களை உடையது. இது கி.பி. 13ஆம் நூற்றாண்டில் செய்யப் பெற்றது. கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் என்பவர் மிக விரிவான முறையில் திருவிளையாடற் புராணம் ஒன்றைப் பாடியுள்ளார். அந்நூற் பாடல்கள் படிக்கப் படிக்க இன்பம் பயப் பனவாய் அமைந்துள்ளன. அக்கால மதுரை நகர அமைப்பு, மக்கள் பழக்க வழக்கங்கள், உடை, உணவு, அணிகலன் முதலியவற்றைப் பற்றிய பல விவரங்களை இந்நூலிலிருந்து தெளியலாம்.
தஞ்சை வாணன் கோவை
இது மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையாரை அடுத்துச் சிறப்புப் பெற்ற கோவை நூல் ; மதுரை மாவட்டத்தில் வையை ஆற்றிற்குத் தென்பாலுள்ள தஞ்சாக் கூரைத் தலைநகராகக் கொண்டு மாறை நாட்டை ஆண்டு வந்த தஞ்சை வாணன் என்ற மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது. இதனைப் பாடியவர் பொய்யாமொழிப் புலவர். இவர் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு. சொற் செறிவும் பொருட் செறிவும் பாநயமும் மிகுந்து விளங்கும் இந்நூல், புலவர் அனைவராலும் பாராட்டப்படுகின்றது. இஃது ஏறத்தாழ நானூறு செய்யுட்களைக் கொண்டது.
குமர குருபரர் நூல்கள்
திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டு வந்தபொழுது (கி.பி. 17ஆம் நூற்றாண்டில்) குமர குருபர சுவாமிகள் பாடிய சிறு நூல்கள் பலவாகும். அவற்றுள் மீனாட்சி96