பக்கம்:ஆற்றங்கரை நாகரிகம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சி தொன்றுதொட்டு வரும் தமிழ் நாட்டுக் கலை வளர்ச்சியே ஆகும்.

மலைகளிலிருந்தும் குன்றுகளிலிருந்தும் கற்களை வேண்டியவாறு வெட்டி, எவ்வித இயந்திர சாதனமும் இல்லாத அக்காலத்தில் அவற்றைக் கொண்டுவந்து, மிக உயர்ந்த மண்டபங்களாகவும் திருச் சுற்றுக்களாகவும், சுவர்களாகவும் எழுப்பினர் எனின், அவற்றை எழுப்பிய கட்டடக் கலை அறிஞரது திறனை எவ்வாறு பாராட்டுவது! பல நூறு அடி உயரமுள்ள கோபுரங்கள் அமைத்தல் எளிதான செயலா? இவற்றைக் கட்டி முடிக்க நம் முன்னோர் எவ்வளவு முயற்சியை மேற்கொண்டனர் என்பதை அமைதியாக எண்ணிப் பார்த்தால்தான் அவர்தம் கலை யார்வத்தை நாம் நன்கறிய முடியும்.

ஓவியக் கலை

ஓவியக் கலை சிற்பக் கலைக்கு முற்பட்டது. ஓவியம் வரைந்து கொண்ட பின்னரே சிற்ப வேலை தொடக்கமாகும். இக்கலை பண்டைக் காலத்திலேயே சிறப்புற்றிருந்தது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்த மண்டபச் சுவர்களில் புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஓவியங்களும் கடவுளரைக் குறிக்கும் ஓவியங்களும் தீட்டப் பெற்றிருந்தன என்று பரிபாடல் பகர்கின்றது. பிற்காலப் பாண்டியர் சிற்பங்கள் இன்று காணக்கூடவில்லை. ஆனால் பாண்டியருக்குப் பின் இந்நாட்டை ஆண்ட நாயக்கர் கால ஓவியங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கண்டு களிக்கத்தக்க முறையில் தீட்டப்பட்டுள்ளன. அவை சிவபெருமானுடைய அறுபத்து நான்கு திருவிளையாடல்களைத் தெளிவாகத் தெரிவிக்கும் முறையில் அமைந்துள்ளன. அவற்றைக் கொண்டு நாயக்கர் கால உடைச் சிறப்பு, அணிச் சிறப்பு, கூந்தல் ஒப்பனை முதலியவற்றை நன்கு அறியலாம்.

98