பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 53 கிரியில் யாழ் வாசிப்பதில் வல்ல பாணர்களுள் ஒருவன் திருக்குறுங்குடி நம்பியைச் சேவிக்க வருகின்றான். அவன் வந்த நாள் கார்த்திகை மாதம் சுக்கிலபட்ச ஏகாதசி. அவன் வரும் வழியில் பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் இவனைப் பற்றிப் புசித்துப் பசி தீர்த்துக் கொள்ள விரும்புகின்றான், நம்பியைச் சேவித்த பிறகு தான் வந்து இராக்கதனுக்கு இரையாவதாகப் பாணன் உறுதி கூற, இராக்கதனும் அவன் சொற்களை நம்பி அவனை விடுவிக் கின்றான். பாணன் நம்பியைச் சேவிக்கின்றபோது கோயிலின் கொடிமரம் சந்நிதியை மறைக்கின்றது. பாணன் அதனைப் பொருட்படுத்தாமல் உளம் உருக உடல் புளகிக்கப் பாடுகின்றான். நம்பியின் அருளால் கொடிமரம் நகர்கின்றது. இதனைக் கண்ட பாணன் மயிர்சிலிர்க்கப் பெற்று ஆழ்வார் பாசுரங்களைக் கைசிகப் பண்ணில் அமைத்துப் பாடுகின்றான்; பாடி அநுபவிக்கின்றான். பாசுரங்களைக் கேட்டு மகிழ்ந்த நம்பியும் அவனுக்கு தேம்பாடுவான்’ என்ற திருநாமமும் வழங்குகின்றார். பாசுரங்களை விரைவாகப் பாடுவதைக் கேட்ட நம்பி காரணத்தை வினவுகின்றார். பாணன் தான் அரக்கனுக்குக் கொடுத்து வந்த வாக்குறுதியைக் கூறுகின்றான். நம்பியின் அருளால் அரக்கனின் பசி நீங்குகின்றது. அவன் தன்னிடம் வந்த நம்பாடுவானைப் புசிக்க மறுக்க, இடைவந்த நம்பி சமாதானம் செய்து ஒரு பாசுரத்தின் இசைப் பலனைத் தாரைவார்த்து அரக்கனுக்குத் தருமாறு நம்பாடுவானிடம் நவில, அவனும் அவ்வாறே செய்கின்றான். இதனால் தான் இத்திவ்வியதேசத்தில் கெளசிக ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்பதையும் ஈண்டு நினைவு கூர்கின்றோம். 6. திருப்புன்கூரில் திருநாளைப் போவாருக்குத் (நந்தனாருக்கு) தேர் நிலையிலிருந்தே இறைவன் காட்சி யளிக்கத் திருநந்தி ' தேவரை விலகியிருக்கும்படி கட்டளை யிட, அவரும் அவ்வாறே விலகிவிட்டதாக வரலாறு.