பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள்

126


வாய் நல்லார் நல்ல மறை யோதி மத்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பாதி வைத்து
காய் சினமா களிறன்றாள் என் கைப் பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன்


தோழி நான் என்று பாடுகிறார்.


குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கவனோடு முடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன்
தோழி நான் என்று பாடி முடிக்கிறார்.


இந்தப் பாடல்களைப் பாடி மகிழ்வோர்கள் குறிப்பாகப் புது மணத் தம்பதிகள் நன் மக்களைப் பெற்று இன்புறுவார்கள் என்று கோதை கூறுகிறார். இப்பாடல்கள் மிக்க சொல் நயமும், பக்திச் சுவையும், தமிழ்ச் சுவையும், பாரதப் பண்பாட்டுப் பெருமையும் கொண்டதாகும். இதன் வழியில் பாரதி பாடியுள்ள கண்ணம்மா பாடல்களைப் பின்னர் காண விருக்கிறோம்.

கண்ணன் ஊதும், முழக்கமிடும் வெண் சங்கிற்கு பாஞ்ச சன்னியம் என்று பெயர். அது வலம் புரிச் சங்காகும். பாஞ்ச சன்னியத்தின் சங்க நாதம் மூலமாகத்தான் ஒலி எழுப்பி, பல சூழ்ச்சிகளையும் செய்து கண்ணன், பாரதப் போரைப் பாண்டவர்களுக்காக நடத்தி முடித்தான். அந்த வெண் சங்கு மிகுந்த பாக்கியம் பெற்றதாகக் கோதை கூறுகிறார். காரணம் என்ன? கண்ணன் அந்த வெண் சங்கை ஊதும் போதெல்லாம் தன் வாயில் வைத்தல்லவா ஊதுகிறான்? அந்த வாயின் உதடுகளில் படும்போது எப்படி இன்ப மயமாக இருக்கும் எனக் கூறுவாய் சங்கே எனக் கோதை கேட்கிறார்.