பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

உள்ளனர். காரணம்? அந்த அவசியம் அங்கு ஏற்படவில்லை; அங்கங்கே தள்ளுவண்டிகள் அந்த நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன. பெட்டிகளுக்கும் உருளைகள் வைத்து இழுத்துச் செல்லும் அமைப்புகள் ஏற்பட்ட பிறகு கூலி போர்ட்டர்கள் தேவை இல்லாமல் போய்விடுகிறது. இங்குச் சென்னை விமான நிலையத்திலும் அந்த நிலை ஏற்பட்டுவிட்டது. அவரவர் சுமைகளை அவரவரே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிச் செல்கின்றனர். அந்த அளவுக்குத் தரைகளும் ஒழுங்காகச் செப்பனிடப்பட்டுள்ளன என்பதும் அறியவேண்டிய ஒன்று. மேலே செல்ல ஊக்கிகள் (lifts}, படி ஏற்றங்கள் (Escalators) அமைந்திருக்கும்போது தொடர்ந்து செயல்படும்போது எதையும் தாங்கும் சுமை தாக்கிகளாக அவை அமைந்துவிடுகின்றன.

வீட்டைச் சுற்றி அவர்கள் உலகம்

வீட்டை அழகுபடுத்துவது வசதிகளைப் பெருக்குவது என்பது அங்கு வாழ்க்கைச் சித்தாந்தம். ஒவ்வொரு வீடும் முன்னும் பின்னும் புல்வெளியும் தோட்டமும் பெற்றுப் பசுமைக் காட்சியைத் தோற்றுவிக்கிறது. வீட்டு முன்னால் கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்கள் நிறம் ஊட்டுகின்றன. ரோஜாப்பூக்கள் பல நிறங்களில் பூத்துக் காட்சியளிக்கின்றன. அவற்றை யாரும் வழிப்போக்கர்கள் கிள்ளுவது இல்லை. அள்ளிச் செல்ல நினைப்பதும் இல்லை. வேலி இல்லாத வீடுகளைக் காணலாம்; தடுப்பதற்கு வேலிகள் தேவை இல்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைப் பூ மணக்கிறது என்பதால் அதைப் பறித்து நாம் நுகர வேண்டும் என்ற கோட்பாடு அங்கு இல்லை.

வீட்டு அறைகளில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. சமையல் அறை; முகப்பு அறை, படுக்கை அறைகள்; குளியல் அறைகள் எல்லாம் தனித் தனியே தக்க அமைப்புப்பெற்று விளங்குகின்றன. ஒரு வீட்டில் பல குடித்தனக்காரர்கள்