பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

கிளீனர் பயன்படுத்தப்படுகிறது; அது மின்சாரத்தால் இயங்கும் கருவி; அதை வைத்தால் தூசுகள் உறிஞ்சப்படுகின்றன; துரசுகள் அகன்று துப்புரவு பெறுகின்றன. சமையல் வேலை வீட்டுக்குரியவர்களே செய்துவிடுகின்றனர். காஸ் அடுப்புகளும் மின்சாரப் பொறிகளும் சமையலை மிக விரைவில் முடித்துத் தருகின்றன. பொருள்கள் கெடாதபடி குளிர்ப் பெட்டிகளில் அவை வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. வேண்டும்போது அவை சூடுபடுத்தவும் அதற்குரிய மின்சாரப் பெட்டிகள் செய்து தருகின்றன. மின்சார சாதனங்கள் எல்லா வேலைகளையும் எளிதில் செய்துகொள்ள உதவுகின்றன.

வீடு எப்பொழுதும் சூட்டு நிலையில் வைக்கப்பட வேண்டும்; வெளியே கடுமையான குளிர்; வீட்டிற்குள் புகுந்தால்தான் குளிரின் தாக்குதலினின்று தப்ப முடியும். வீடு முழுவதும் வெந்நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் சூடாக அறைகளை வைத்துக்கொள்ள முடியும். அவை மட்டுமல்லாமல் மின்சாரச் சூடுபெருக்கிகள் அங்கங்கே பொருத்தப்படுகின்றன. கட்டைகளிலும் மின்சாரத்தால் கதகதப்பாக வைக்கப்படுகின்றன. வெளியே நடக்கும்போது நாம் அணிந்துகொள்ளும் கம்பளி அங்கிகள் நமக்குப் பாதுகாப்புத் தருகின்றன. ஒவ்வொரு வீடும் கடையும் நிறுவனங்களும் சூடு உற்பத்திச் சாதனங்களைப் பெற்று இருக்கின்றன.

வீட்டு வேலை செய்வது கவுரவத்தை விட்டுக்கொடுத்து எடுபிடி வேலை செய்யும் தாழ்வான தொழிலாக மதிக்கப் படுவதில்லை. எந்தத் தொழிலும் அந்த நாடுகளில் இழிந்தவை என்று கருதப்படுவதில்லை. அவரவர் தம் திறமைக்கும் பழக்கத்துக்கும் சாதனைக்கும் ஏற்பத் தொழில் நடத்துகின்றனர். எவரையும் அவர் செய்யும் தொழிலால் அதிகம் மதிக்கத் தேவை இல்லை. தோட்டத் தொழிலாளி