பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணம்

சுற்றுலாப் போதல் (Tourism) என்பது நம் நாட்டில் இப்பொழுதுதான் ஒழுங்கான முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது, இமயம் முதல் குமரி வரை பரந்துபட்டுள்ள இப் பாரததேசம் பல மொழிகளைப் பல்வேறுபட்ட மக்களைக் கொண்டுள்ளது. வரலாற்று அடிப்படையிலும் கலாச்சார அடிப்படையிலும் பாரத தேசம் ஒன்றாக இயங்கிவருகிறது. அரசியல் சட்டம் ஒன்றுபடுத்தியுள்ளது. என்றாலும் மொழிகள் ஒரு தடையாக இருக்கின்றன.

டூரிஸ்டு பஸ்கள் தக்க கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு தங்கும் இடங்களும் செல்லும் வசதிகளும் செய்து ஒருவாறு நம்மைப் புறப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். பழங்காலத்தில் பக்தியின் அடிப்படையில் காசி இராமேஸ்வரம் இரண்டு எல்லைகளாக இயங்கி மக்களை யாத்திரைகளை மேற்கொள்ளச் செய்தன. இப்பொழுது உண்மையில் தேசங்களையும் முக்கியமான இடங்களையும் அந்த அந்தப் பகுதி மக்களையும் காணவேண்டும் என்ற ஆர்வமும், பழகிப்போன வாழ்க்கை முறைகள் புளித்துவிடுவதால் மாற்றம் காணச் சுற்றுலாப் போதல் மேற்கொள்ளப்படுகிறது. இது அண்மைக் காலத்துப் புதிய மாற்றம்.

அங்கே ‘டியூரிசம்’ என்பது மிகச் சிறந்த முறையில் செம்மையாக நடைபெறுகிறது. குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டால் ஒரு தேசத்தில் இருந்து ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்க வசதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் இருந்து பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து, பெல்ஜியம் பல தேசங்களுக்குச் சுற்றலாச் செல்கின்றனர். அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா சுற்றிப் பார்க்க வருபவர் மிகுதி. அதேபோல ஐரோப்பியர்கள் அமெரிக்கா சென்று ஊர்கள் சுற்றிப் பார்க்கின்றனர்.