பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உயிர் துறக்கிறாள். அவள் பிணம் கீழே அறுந்து தொங்குகிறது. இது தான் அவன் சோகத்துக்குக் காரணம். அவளை நினைத்து நினைத்து ஏங்குகிறான்; குடிக்கிறான்; அதுவே அவன் வாழ்க்கையின் சோக கீதமாக மாறுகிறது. அந்த மடையன் (கதா நாயகன் ) அவள் அப்பா செய்த தவறே செய்கிறான். கல்லூரி மாணவி ரசிகை அவனைக் காதலிக்கிறாள். அவனையே மணப்பதாக உறுதி கொள்கிறாள். அவனும் அவளிடம் அன்பும் ஆதரவும் காட்டுகிறான். அவளைத் தெரிந்த மற்றொருவன் உறவுக்காரனாம். அவளைக் காதலிக்கிறானாம். இதை அறிந்த கதா நாயகன் (மோகன் ) அவனை அவள் மணக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறான். அந்தக் கற்புக்கரசி செயலற்றுத் தன் நெஞ்சைக் கதா நாயகனிடம் பறிகொடுத்த காரணத்தால் அவன் கால்களில் விழுந்து உயிர்விடுகிறாள்.

இந்த மனோ நிலைகளில் எவ்வளவு கோளாறுகள்! அப்பாவுக்கு அவளை (அம்பிகாவை) வற்புறுத்த உரிமை இல்லை, கதாநாயகனுக்கு அவளை (ராதாவை) வற்புறுத்த உரிமை இல்லை. இப்படிப் பிறர் வாழ்வைக் கெடுக்கும் அறிவாளிகள் ஒருபுறம்; அவள் எதைப் புனிதமாக நினைத்துக் காப்பாற்ற நினைக்கிறாளோ அதை அற்பத்தனமாக்கத் துடிக்கும் கீழ்மக்கள் ஒருபுறம். அவள் வாழ்வைப் பாழ்படுத்துவதாக நம் தமிழ்ச் சித்திரம். இவை நாம் அங்கீகரிக்கும் வாழ்க்கை நிலைகள்.

இந்தப் படத்தை வைத்து அந்த நாட்டு வாழ்வியலை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

அந்தப் பெண்கள் எங்கோ அமெரிக்காவில் பிறந்தவர்கள். இந்தப் புதிய நாடுகளில் பல இடங்களுக்குத் தனியே செல்கிறார்கள். (நாங்கள் தனியே செல்லப் பயப்பட்டோம்) அவர்கள் தம் புனிதத்தை இழந்துவிட மாட்டார்கள். முரடர்கள் அவர்களைக் கெடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள்.