பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

பிரமாதமாகப் பேசப்படுகின்ற அந்தப் புனிதம் பறி போய் விட்டால் அந்த உத்தமிகள் உயிர் விடமாட்டார்கள். அந்தப் புனிதம் பறிபோவதும் இல்லை. எதைப் பத்திரமாகக் காக்கவேண்டும் ஊறு செய்யக் கூடாது என்ற மனித உணர்வு அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

அங்கே நிர்ப்பயமாகப் பெண்கள் எங்கும் செல்கிறார்கள். முதலில் கணவன்மார் அவர்களை நம்புகிறார்கள். மனைவி கணவனை நம்புகிறாள். இதைப்பற்றி அதிகம் பேசாமல் அவர்கள் கண்ணியமாக வாழ்கிறார்கள். அவர்கள் கற்பு பறிபோவதில்லை. இங்கு மட்டும் ஏன் இந்த அற்பத்தனம்! நாம் எவ்வளவோ முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம். ‘என்னமோ போய்விட்டது; போய் விட்டால் வாழ முடியாது தற்கொலைதான் வழி’ என்ற மன நிலை மாறவேண்டும். இதற்கு மேலை நாட்டுப் பெண்கள் நிச்சயம் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும். இதற்கு மேல் விவாதங்களை வளர்ப்பதில் பயன் இல்லை, மேலே தொடர்கிறேன்.

கப்பலில் சந்தித்த நினைவு; மிகவும் வயது குறைந்தவள்; யுவதி; அவள் எங்கே பயணிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். துணிந்து பேசினேன்; பேசுவது சுலபம் இல்லை. அவர்கள் பேசும் ஆங்கிலம் எனக்கு விளங்குவது இல்லை. வியப்பாக இருந்தது. இத்தாலியில் ஏதோ ஒரு மலைப்பிரதேசம், அங்கே ஒரு நதி: ஊர்; அங்கே பதினைந்து நாள் தங்கப்போவதாகச் சொன்னாள்; எப்பொழுதுமே கும்பலில் பழகிவிட்டுத் தனிமை விரும்பும் ஒரு மனப்போக்கு. எங்கோ முன்பின் தெரியாத இடத்தில் ஒரு தனிமையை அனுபவிப்பது என்ற அமைப்பெல்லாம் நாம் சிந்தித்தும் பார்த்ததும் இல்லை. எல்லோரைப் போலவே வாழ்வது என்று பழகிவிட்ட நாம் இந்தத் தனிப்போக்குகளை நினைத்தும் பார்க்க முடியாது.