பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

உரியவராகக் காட்டப்படுகின்றனர். இது தேவைதானா? கல்வியின் தரத்தில் இந்த நிறுவனங்களில் நம்பிக்கை இன்மையே இதற்குக் காரணமாகிறது. அவர்கள் படிக்கச் செல்லவில்லை; இந்தக் கேளிக்கைகளுக்குத்தான் போகிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம்; நாம் மறுக்க முடியாது . ஏதோ நாம் கல்வித் துறையைப் பொருத்தவரை செயலிழந்து நிற்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது. படித்தால் அவனுக்கு அதை ஒட்டி எதிர்காலம் இல்லை என்பது தெளிவான உண்மை. லாட்டரி சீட்டு வாங்குவதும் பல்கலைக் கழகப் பட்டச் சீட்டு வாங்குவதும் சில சமயங்களில் சமமாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. வேலையில்லாமல் ‘லாட்டரி’ அடிக்கிறான் என்ற பழமொழி இதற்குச் சான்று தரும் என்று நினைக்கிறேன்.

டாக்டர் மு. வ. ‘கி.பி. இரண்டாயிரம்’ என்ற நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். உயர்ந்த சமூகக் கோட்பாடுகள்; உழைப்புக் குறைவு; சிக்கலற்ற தெளிவான வாழ்க்கை இப்படி அமையவேண்டும் என்ற காட்டினார்கள். கி.பி. இரண்டாயிரத்தை நெருங்கிவிட்டோம் எந்தத் தெளிவும் ஏற்படவில்லை. அதனால் சமுதாயத்தில் வளர்ச்சியே இல்லை என்று கூறமுடியாது. வளர்ந்த நாடுகளில் சில நல்ல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை கற்பனை இல்லை; மனித சாதனை. அவற்றை நாமும் அடைய முடியும்; முதலில் அவை என்ன என்பதைத் தெளிவாக அறிய வேண்டும். அறிய முயல்வது தேவைப்படுகிறது.

நன்றி நவிலல்

வெள்ளையர்கள் ஒரு சிறு நன்மை செய்தாலும் உதவினாலும் உடனே ‘நன்றி’ என்று சொல்லும் பழக்கத்தைப் பார்க்கிறோம். நாமும் அங்கு அவ்வாறு சொல்லிப் பழகிக்