பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

பொருளும் தக்கபடி உறையிட்டு (pocket) எடுத்துச் செல்ல வசதியாகத் தந்துவிடுகிறார்கள்.

சரக்குகளை அவர்கள் தேக்கி வைத்துக் கொள்வது இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட மாதங்களில் ‘sales’ என்று விளம்பரப்படுத்தி விலை தள்ளித் தந்துவிடுகிறார்கள். பொருள் வாங்குவோரிடம் போனால்தான் தொடர்ந்து பொருள் உற்பத்தி செய்யமுடியும், பொருள் பழுதுபட்டுக் கெட்டுப் போகாமலும் இருக்கும். குறைந்த விலையில் கிடைப்பதால் துணிந்து வாங்கவும் செய்கிறார்கள். ஒரு சிலர் அந்த sales வரும் வரை சில பொருள்களை நிதானமாக வாங்கிக் கொள்ளக் காத்துக் கிடப்பதும் உண்டு.

நம் நாட்டு நிலை

அந்த நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்கு வருகிறவர் புரிந்துகொள்ளமுடியாத காட்சிகள் சில இங்கே உள்ளன. காய்கறிக்கடை தள்ளுவண்டிகளில் நம் வீட்டுமுன் வந்து நிற்க அவன் கூப்பிட்ட குரலுக்கு வீட்டுத் தலைவிமார்கள் வெளியே தலை காட்டுவதும், அவன் குரல் கூவிக் கூவி ஒரு கரகரப்போடு விளங்குவதும், அவர்கள் கடை விலைகளைவிட அதிகம் விற்கிறார்கள் என்று பேசுவதும் அங்கே காண முடியாது. இப்பொழுது புதிதாக ஒன்று இணைந்து இருக்கிறது, ‘நடமாடும் இஸ்திரி வண்டி’ நகரங்களில் காலனிகளில் அவை அதிகம் நடமாடுகின்றன. தலையில் கூடையில் சுமந்து சுமக்கும் அளவுக்குக் கொண்டு வந்து விற்று வாழ்க்கைச் சுமையைக் குறைத்துக் கொள்ளும் பெண்கள், ‘பூ’ வேண்டுமா என்று சொல்லி வீடு தேடி வந்து. ‘சாதிமுல்லை, இருவாட்சி’ என்று பாடிக் கொண்டு வரும் காட்சிகள் அங்கே நினைக்கவும் முடியாது. கடைகள் நம் வீடு தேடி வருகின்றன. நாம் கடைகளைத் தேடி அங்குச் செல்கிறோம். இந்தக் காட்சிகள் எனக்கே இப்பொழுது புதுமையாகத் தெரிகிறது.