பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

என்று தெரிந்த பிறகு அவரவர் அவர்களுக்காக வாழ முடிகிறது. இது ஒரு சவுகரியம்தான்.

அங்கே ஒரு செய்திப் பஞ்சம் ஏற்பட்டது. நம் நாட்டு அரசியல் பத்திரிகைச் செய்திகள் அல்ல; பொதுவாக இங்கே அன்றாடம் கேட்டு ரசிக்கும் அக்கம்பக்கத்தவரைப் பற்றிய தகவல்கள். குழாய்ச் சண்டைகளில் ரசிப்பது உண்டு: அடுத்தவள் எப்படி. வாழ்கிறாள் என்பதை அறிந்துகொள்வது வியப்பாக இருக்கும். இதற்காகவாவது தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுவது நல்லது என்று தெரிகிறது. சுவாரசியமான விமர்சனங்களைக் கேட்க முடிகிறது. அடுத்தவர்களைப் பற்றி வெளிப்படையாக விமரிசிக்கும் துணிவும் தெளிவும் இங்கே தான் பார்க்க முடிகிறது.

பிறர் சொந்த வாழ்க்கையை மற்றவர்கள் விமரிசிக்கும் பழக்கம் அங்கு இல்லை என்று தெரிகிறது. ஏதோ சாயங்காலம் கடைக்குப் போகிறோம் என்றால் வழியில் எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். முக்கியமாக பஸ் பயணம் புதிய புதிய அனுபவங்களை இங்குத் தருகிறது.

பெண்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் ஒரு சீட், காலியாக இருந்தது. துணிந்து அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அந்த அம்மையார் சட்டென்று எழுந்து கொண்டாள், எனக்கு அவர் தரும் மரியாதை அல்ல அது; அவள் பக்கத்தில் உட்கார்ந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.

நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்று தைரியம் சொன்னேன், “அது எனக்குப் புரிகிறது” என்றாள்; சிரித்துவிட்டேன்.