பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

67


இப்போது, இதே பத்தாம் மண்டலத்தில், அவிதவா (விதவையல்லாதவள்) என்ற சொல் வரும் இடத்தைப் பார்க்கலாம். இந்தப் பாடல், பெண்ணின் நிலை பற்றிய ஆய்வுக்கு மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் பாடலில்தான் ‘அக்ரே’ என்ற சொல், ‘அக்னே’ என்று திருத்தப்பட்டு சனாதன ஆண் நாயகச் சமுதாயம், கணவன் இறந்ததும் மனைவியையும் சிதையிலேற்ற வேத அங்கீகாரத்துக்குரியதாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

(‘அக்ரே’ என்ற சொல்லே அக்னியைக் குறிக்கும். அக்ரே என்றால் முதல் தெய்வத்துக்குறிய அக்னிதான் என்று பொருள் சொல்வரும் உண்டு) கணவன் சிதையில் இருக்கும் போது, சிதையை நோக்கிச்செல்லும் மனைவியைத் தடுத்து நிறுத்தி, ‘அவளை விதவையல்லாதவர்களும், சுபத்னிகளாகிய பெண்களும் முன்வந்து வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்லட்டும்’ என்ற பொருள்படக் காணப்படும் பாடல் அது.

(அக்ரே முன்னே - அக்னே நெருப்பு)

‘விதவையல்லாதவரும் சுபத்னிகளும் இவளை மணப் பெண்ணாக்கி, அக்கினிக்கு அழைத்துச் செல்லட்டும்’ என்ற பொருளை சனாதன ஆண்நாயகம் வலியுறுத்தி அவளை நெருப்பில் போட்டது. இங்கே, ‘சுமங்கலி’ என்ற சொல் ஏன் கையாளப்படவில்லை? சொல்லப் போனால் ‘சுமங்கலி’ என்ற சொல், வேறு எந்த இடத்திலும் இல்லை - நாம் இன்று கொள்ளும் பொருளில் இல்லை என்றே சொல்லலாம்.

‘அவிதவா’ என்ற சொல்லும், ‘ஸுபத்னி’ என்ற சொல்லும் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பெறுகின்றன.

விதவையல்லாதவள் - புருஷன் உடையவள்- அது ஒன்றே போதுமே? ஸுபத்னி என்ற சொல் வேறு எதற்கு? இதற்கும் நல்ல கணவனை உடையவள் என்றுதானே