பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பும், ஒரே விதமான சிந்தனைப் போக்கும் தோன்றியது. உலக கண்ணோட்டத்தில் வேறுபட்ட பல தத்துவங்கள், கடவுள் என்ற கருத்தை மட்டும் தருக்க ரீதியாக ஆராய்ந்ததால்தான், கடவுள் என்ற கருத்துக்கு எதிரான வாதங்கள் கூட ஒரே விதமாக உள்ளன.
இந்தியத் தத்துவ வாதிகளில் மிகப் பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்திய தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது. இன்று கூட இந்திய நாத்திகவாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள் வாதிகள் பதில் சொல்லுவது மிகவும் கடினம்.
அப்படியானால் மிகச் சிறந்த தத்துவ வாதிகளும், தருக்க நிபுணர்களும் நாத்திகவாதிகளாயிருந்தும், இந்தியாவில் நாத்திகம் பரவவில்லையே, ஏன்? வேதகால முதல் பெரியார் காலம் வரை தொடர்ச்சியான நாத்திகவாதம் இந்தியாவில் வழங்கி வந்திருந்தும் இங்கு மக்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பது ஏன்?
இதன் காரணத்தை தத்துவ வேலிக்கு அப்பால் சென்று காணவேண்டும். கடவுள் நம்பிக்கைக்கு உணவு அளிக்கும் அடிப்படை எது? இக்கேள்விக்குப் பதிலளிக்க மார்க்சின் சிந்தனை உதவுகிறது.
இந்திய நாத்திகர்கள் கடவுள் ஒரு பொய்த் தோற்றம் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப் பாடுபட்டார்கள். அவர்களுடைய தர்க்க முயற்சிகள் வெற்றி பெற்றன. ஏனெனில் அவர்களுடைய வாதங்களுக்கு பதிலளித்த ஆன்மீகவாதிகள் தர்க்க ரீதியாக விடைகூற முடியவில்லை. ஆயினும் இந்திய நாத்திகவாதிகள் மார்க்சுக்கு முந்திய மேநாட்டு நாத்திகவாதிகளைப் போலவே கடவுளை சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்து தனியாக ஆராய்ந்தார்கள்.

மார்க்ஸ்தான் சமூக வாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது என்ற மகத்தான உண்மையை விளக்

11