பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூறி தம்முடைய வாதத்தை உதயணர் துவக்குகிறார். மேலும் அவர் எழுதுகிறார்:

“எல்லோராலும் வணங்கப்படும் பரம்பொருள், (வணங்கும் மனிதர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்கள் வேறுபட்ட போதிலும்) உபநிடதங்கள் ஒன்றென அழைப்பதும், ‘முதல் அறிவன்’ என்று கபிலர் குறிப்பிடுவதும், கிலேசங்களால் பாதிக்கப்படாத ஒன்று என்று பதஞ்சலி வருணிப்பதும், சிவன் எனச் சைவர்கள் சொல்லுவதும், புருஷோத்தமன் என வைஷ்ணவர்கள் வணங்குவதும், சர்வ சக்தியுள்ளது எனப் பெளத்தர்கள் பணிவதும், நிர்வாணி என்று ஜைனரால் கருதப்படுவதும், சாருவாகர்கள் ‘லோக விவகார சித்தம்’ (உலக நிகழ்ச்சிகளின் மனம்) என்று கூறுவதும், ஜாதி, கோத்திரம், பரிவாரம் போன்ற உலக உண்மைகளைப் போல உண்மையானது. எனவே இப்பரம்பொருள் பற்றி ஆராய்ச்சி தேவையில்லை.”

ஆத்திகர்களால் பேரறிவாளர் என்று போற்றப்படும் உதயணரது புரட்டல், ஏமாற்று வித்தையை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள். இந்திய தத்துவவாதிகள் அனைவரும் கடவுளே ஏதாவது ஒரு வழியில் நம்புகிறார்கள் என்று காட்ட உதயணரது மாயாஜாலம் பயன்படுகிறது. கபிலர் என்பவர் சாங்கியத்தின் முதல்வர். இவரது சாங்கியம் பொருளே பிரதானம் என்று கூறுகிறது. பெளத்தர்கள், ஜைனர்கள், மீமாம்சகர், சாருவாகர்கள் அனைவரும் கடவுளை மறுக்கப் பல வாதங்களை உருவாக்கியவர்கள். புகழ்பெற்ற நாத்திகர்களை ஆத்திகர்களாக மாற்ற உதயணர் செய்திருக்கும் மோசடி வித்தையை நம்பின மூடர்களும் நடுக்காலத்தில் இருந்தார்கள். இக்கால ஆத்திகவாதிகள், ராதாகிருஷ்ணன் உள்பட இந்த சாமான்ய சாலத்தை நம்புகிறார்கள். ஆனால் தத்துவ வாதிகளில் பலர் சாமான்ய சாலத்தின் தருக்கப் பிழையை விளக்கி கடவுளை மறுத்துள்ளார்கள்.

மிக முக்கியமான இந்திய தத்துவங்கள், மீமாம்சம், சாங்கியம், வேதாந்தம் (பிற்கால மீமாம்சம்), பெளத்தம்

19