பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



களில் பல வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவையனைத்தும் ஒரு அடிப்படையான தன்மையில் ஒன்றாகவே இருக்கின்றன. அவையாவும் ஒரு சிறுபான்மைப் பிரிவினர், மற்றோர் பெரும்பான்மைப் பிரிவினரை சுரண்டுகிற அமைப்புக்களே. இவ்வடிப்படைகளில் இருந்து தோன்றிய கருத்துக்களில் சில பொதுப்படையான கூறுகள் காணப்படுகின்றன. வர்க்கப் பகை ஒழியும் வரை இச்சிந்தனைகள் இருந்துதான் தீரும்.

"கம்யூனிஸ்டுப் புரட்சி மரபு வழியான சொத்துரிமை உறவுகளை ஒழித்து மரபையே மாற்றுகிறது. எனவே மரபு வழியான கருத்துகளில் இருந்தும் ஒரு முறிவை உண்டாக்கிப் புதிய கருத்துக்களைப் படைக்கிறது."

இப்புதிய கருத்துக்கள், வரலாறு முழுவதிலும் சிதறிக் காணப்படுகிற தீவிரமான, மனித நேயக் கருத்துக்களின் புதிய காலகட்டத்தின் வளர்ச்சியே.

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் கழித்து. 1922-ல் லெனின் மதக்கருத்துக்களை எதிர்த்து நாத்திகத்தைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். மதக்கருத்துக்களின் அழுத்தம் மக்கள் மனதில்,புதிய மனித நேயமும், முற்போக்கான கருத்துக்கள் வளராமல் தடைக் கல்லாக இருந்து, மக்களது விடுதலை பெற்ற உழைப்புச் சக்தி வளராமல் தடுப்பதையும் உணர்ந்து, மதக் கருத்துக்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து விரிவான பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் எழுதினார்:
லெனின் எழுதினார்:

“எல்லா மொழிகளிலும் இப்பொருள் பற்றி (நாத்திகம்) எழுதப்பட்டிருக்கும் நூல்களை எல்லாம் கவனமாகப் படித்து அவற்றில் இருக்கும் முக்கியமான கருத்துக்களை விமர்சனம் செய்தல் வேண்டும். அல்லது மதிப்புரைகள் எழுத வேண்டும்,”

“எங்கெல்ஸ் தமது காலப்புரோலிட்டோரியன் தலைவர்களுக்கு, 18-ம் நூற்றாண்டின் தீவிரமான நாத்திக நூல்களை மொழி பெயர்க்கும்படி ஆலோசனை கூறினார், 18-வது நூற்றாண்டின் புரட்சிவாதிகளின் எழுத்துக்களில் அறிவியல் பூர்வமற்ற கருத்துக்களும், அப்பாவித்

45