பக்கம்:இன்னொரு உரிமை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 91


அவளுக்கு யார் அடைக்கலம்? இந்த ஊரில் இருப்பவர்கள் வேலை பார்ப்பது, கல்யாணம் செய்வது, பிள்ளை பெறுவது, வயல் தோட்டங்களை விற்பது அல்லது வாங்குவதைத் தவிர வேறு எதைக் கண்டார்கள்? எத்தனையோ பேர் வாழ்ந்துவிட்டுப் போன இந்த ஊரில் என்ன மிஞ்சி இருக்கு?

நாம ஏன்... இவளோட வாழக்கூடாது? 'மாடசாமி நாடார் மவன் மாதிரி மாட்டிக்க மாட்டோமு'ன்னு சொல்லுற இளைஞர்களிடம், 'மாடசாமி மவனப் பாருங்கல... கிடைச்சவள வச்சிக்கிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்' என்று ஊர்க்காரர்கள் சொல்லும்படி நாம ஏன் முன்னுதாரணமா வாழக்கூடாது?

தென்காசிக்குப் போயிருக்கும்போது, கிருபானந்த வாரியாரோ கிருஷ்ணவாரியாரோன்னு ஒருவர், நளாயினி, குஷ்டரோகம் பிடிச்ச புருஷனைக் கூடையில் சுமந்ததாகச் சொன்னாரே, நாம ஏன், குணரோகம் பிடிச்ச இவள திருத்தக்கூடாது?

வீட்டு நாய்கிட்ட, அது நாயுங்கறதுக்காக ஆசை வைக்காமலா இருக்கோம்? இவளும் ஒரு மனுஷிதான். 'இளையோடியா' கிட்ட அவஸ்தபட்டதுல மிரண்டு போயிருக்காள். இன்னொரு கல்யாணம் பண்ணி அவள்கிட்டேயும் இவள் அவஸ்தைப்படணுமா? இவள் அவஸ்தையிலே கிடைக்கிற கல்யாணம், அதுலகிடைக்கிற சுகம் ஒரு சுகமா?

பிறந்தாலே சாவு இருக்குன்னு அர்த்தம். சாவப்போற நாம ஏன் அதுவரைக்கும் இவளுக்காக வாழக்கூடாது? நமக்குப் பேசின பொண்ண ஏன் தம்பிக்குக் கட்டி வைக்கக் கூடாது? அப்படித்தான் செய்யணும்.

சிந்தித்துக் கொண்டிருந்த வைரமணியின் தோளைத் தட்டி "நேரமாவுதுடா'" என்றார் ஐயாசாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/100&oldid=1369366" இலிருந்து மீள்விக்கப்பட்டது