பக்கம்:இன்னொரு உரிமை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமதேனு99


திருமலையம்மா அதிர்ந்துபோனாள்; ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமலே சுருதி குறைந்து பேசினாள்.

"கொசுவுக்குப் பயந்து கோட்டை கட்டணுமாக்கும்... அந்தப் பயல்... அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரி கொடை. பிடிப்பாங்கிறது மாதிரி அப்படிப் பேசிட்டான். விட்டுத் தள்ளு."

"செருக்கி மவன்" மேளக்காரன்லா சொல்லிட்டான்.!

"மேளம் அடிக்கிறதும் ஒரு தொழில் தானடா... நீ கூலிக்குக் கமலை அடிக்கலியா, உழவு உழ போகலியா, அது மாதிரி அதுவும் ஒரு தொழில்தாண்டா. விட்டுத்தள்ளு. சந்திரனைப் பார்த்து நாய் குலைச்சு என்னவாகும்?"

"என்ன ஆவுமோ! நான் சந்திரன் மாதிரி மின்னிக் காட்டப்போறேன்! என்னை அவங்க பார்த்துட்டு, வேட்டை நாய் மாதிரி குலைக்கப்படாது... சொறி நாய் மாதிரி குன்னிப் போகணும்."

திருமலையம்மா மகனை வாயகல, பல் விலகப் பார்த்தாள். அவன் பேச்சின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டாள். சுருள் சுருளான முடியோடு, மா நிற மேனியோடு, பெரிய மனிதத் தோரணையோடு, எலும்பும் தோலும் வேறு வேறானவை என்று சொல்ல முடியாதபடி, 'அந்த மனுசனைப்போலவே இறுகிப்போயும், எழில்பட்டும் தோன்றிய மகனையே திக்குமுக்காடிப் பார்த்தாள். இப்போ தான் அவனுக்குப் பால் கொடுத்தது மாதிரி இருக்குது. எப்படி வளர்ந்துட்டான். வளரட்டும்... ஆனால் வளர வளர புத்தி ஏன் கட்டையா போவுது? அவளுக்கு நெஞ்சு சுட்டது; உணர உணர வாய் சூடாகியது. மூத்த மகனைத் திட்டினாள் "அந்த நொறுங்குவான் குடும்பத்தைக் காப்பாத்துவான்னு அவனை காலே ஜ்ஜிலே படிக்க வைச்சேன். கடைசியிலே அவன் குடும்பத்தைப் பிரிக்கத்தான் படிச்சிருக்கான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/108&oldid=1369346" இலிருந்து மீள்விக்கப்பட்டது