பக்கம்:இன்னொரு உரிமை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194சு. சமுத்திரம்

ஒலிப்பது நின்றதும், படபடத்துப் பார்த்தாள். போய்விட்டானோ என்பதுபோல் பரபரப்பாய்ப் பார்த்தாள். அவள், ஏறிட்டுப் பார்த்தபோது முத்துலிங்கம் அம்மாவைப் பார்த்தபடியே நின்றான். தாயால் தாளமுடியவில்லை. மகனுக்கு முன்னால் வந்து மன்றாடினாள்.

“நான் சொல்றதை நல்லா கேளு ராசா! கொளம் பெருகல தான்... ஆனால் குற்றாலத்து சித்தாரைக் கொண்டுவர கால்வாய் வெட்டுறாங்க. அடுத்த வருஷத்துலே இருந்து குளம் பெருகப் போகுது. பூமியிலே பொன்னு விளையப் போகுது. சொல்றத கேளுடா!”

“சரி. இந்த ஒரு வருஷம் வரைக்குமாவது போறேன்!”

திருமலையம்மா மகன் முகத்தைப் பார்த்தாள். ‘அந்த மனுஷன்’ மாதிரியே அது உறுதிப்பட்டுக் கிடந்தது. புரிந்துகொண்டாள். இவனைத் தடுக்க முடியாது; அவள் தனக்குள்ளே வெம்பி, தன்னைமீறி தாவி வந்த வார்த்தைகளை பல்கட்டி சிறையிட்டாள். கண்களை மூடிக்கொண்டாள். முத்துலிங்கம் குரலிட்டான்.

“போறேம்மா..”.

திருமலையம்மா விம்மலோடு வெடித்தாள்; “போறதே போறே... போயிட்டு வாறேன்னாவது சொல்லிட்டுப் போடா... அடியே ஆயிரம் கண்ணுடையாள் மாரியம்மா! ஞாபகம் இருக்காடி ஒனக்கு... இருபது வருஷத்துக்கு முன்னாலே இப்போ துள்ளுற இவன் வயித்துலே அவதிப்படுத்துறான்னு உனக்கு மாவிளக்கு ஏத்துறதா கோயிலுல வந்து நேர்ந்தேன். நீயும் இந்தப் பயல பொறுமையாக்கித்தந்த... அதுக்குப் பிறகு, இவன் நாலு மாசத்துல வயித்துக்கு வெளியே இருந்தாலும் என் வயித்துக்குள்ளே இவன்... ஒரேயடியாய் மீளமுடியாம உதைக்கிறது மாதிரி இருக்குதே! உனக்கு என்ன தாயே குறை வச்சேன்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/113&oldid=1368573" இலிருந்து மீள்விக்கப்பட்டது