பக்கம்:இன்னொரு உரிமை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110சு. சமுத்திரம்

பன்னிரண்டு பலகைக் “குடில்களிலிருந்து” ஜோடிப் புறாக்கள் வெளிப்பட்டன. இரண்டே இரண்டு பலகைக் குடில்களில்தான் இரண்டு புறாக்கள் தனிக்குடித்தனம் நடத்திவந்தன.

கும்மாளம்மா சுவரில் குப்புறச் சாய்த்து வைக்கப்பட்ட தட்டை எடுத்து வந்தபோது, அத்தனை புறாக்களும் அங்கே கூடிவிட்டன. அந்தத் தட்டை அங்கே வைத்துவிட்டு தூக்குப் பைக்குள் இருந்த கேழ்வரகு, கம்பு தானியங்களை அந்தத் தட்டின் அடிவாரம் மறையும்படி படரவிட்டாள். பெரும்பாலான புறாக்கள் தானியங்களைக் கொத்திக் கொத்தி உடைத்து, துகள்களாக்கி உள்ளே போட்டுக்கொண்டிருந்தன. அந்தப் பக்கமாய் வந்த காகங்களைத் துரத்தின. அணில்களைப் பார்த்து அலகுகளால் எச்சரித்தன. இந்தப் புறாக் கும்பலுக்கு இடையே ஒரு சின்னப் புறா. பெரிய புறாக்களுக்கு இடையே முந்தியடித்து தானியங்களைக் கொத்தப்போன போது—

கும்மாளம்மா தான் பெற்ற பிள்ளைகளைப்போல் அந்தப் புறாக் குவியலையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளாய் உருமாற்றம் ஆனது போன்ற காட்சி. உலகில் தெரியும் அத்தனை வண்ணங்களையும் காட்டும் அலங்கார கலாபங்களானது போன்றத் தோற்றம். ஒளிப்பிழம்புகளை ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை மாற்றி மாற்றிப் போட்டும், இன்னும் அது தோற்றுவிக்கும் எண்களுக்கு எப்படி முடிவு காணவில்லையோ, அப்படி ஏழு வண்ணங்களும், ஏழேழு வண்ணச் சாயல்களும் கூடியும், குலவியும் தேடியும், திரட்டியும் வண்ணக் கூட்டுக்களை சுமக்கும் மேனிகள்.

திருமணமான பத்து மாதங்களுக்குள்ளேயே எட்டு மாதத் தாய்மைப்பேறைப் பெற்ற கும்மாளம்மா, அந்த புறாக் கூட்டத்தில் தனது செல்ல பிள்ளையைத் தேடினாள். அது இல்லையோ என்பதுபோல் அடிமடியில் கை வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/119&oldid=1368726" இலிருந்து மீள்விக்கப்பட்டது