பக்கம்:இன்னொரு உரிமை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் புறாக்கள்111

பிறகு இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினாள். அந்த சின்னப் புறாவும், அவளைப் பார்த்துச் செல்லமாகத் தலையாட்டியது. உடனே இவள் கிண்ணத்திலிருந்து ஊறவைத்த கடலையை கல்வம்போல் இருந்த கல்லில் படரவிட்டு அதனைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டாள். ஆனால் அவளது அந்தச் செல்லப் புறா “நான் பெரிய மனுஷி ஆயுட்டேனாக்கும். என்னால இந்த கேழ்வரகைக் கொத்தித் தின்ன முடியுமாக்கும்” என்பதுபோல் இதரப் புறாக்களுடன் முந்தியடித்தது. உடனே, இவள் அந்தப் பக்கமாய்ப் போய் அந்தப் புறாச் சிறுமியைப் பிடித்துக்கொண்டாள். அதன் நீலக் கண்களில் மாறிமாறி முத்தமிட்டாள். பதில் முத்தம் கொடு என்பதுபோல் அதைப் பார்த்துவிட்டு, பிறகு அதன் அலகை எடுத்து தனது கன்னத்தில் தடவிவிட்டாள். ‘பறந்து காட்டு’ என்பதுபோல் கையிலிருந்து உயரமாக அதைத் தூக்கிவிட்டபோது, அது பறந்துபோய் அவள் வீட்டு ஓட்டில் போய் உட்கார்ந்தது.

கும்மாளம்மா புறாக்களை எண்ணிப் பார்த்தாள். இருபதுக்கு ஒன்று குறைந்தது. அந்தச் சமயம் பார்த்து ஒரு இருமல் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்துக்காரர் புறாக் கூண்டுக்குப் பக்கத்தில் போடப்பட்ட ஒரு வட்டக்கல்லில் உட்கார்ந்திருந்தார். அந்த ஆசாமிதான் ஒன்றை அமுக்கியிருக்க வேண்டுமென்று அவளுக்கு ஒரு சந்தேகம். அதை பட்டும் படாமலுமாகக் கேட்டாள்.

“என்ன தாத்தா, காலங்காத்தாலேயே இங்க வந்து ஒக்காந்துட்டீரு? ஒரு புறாவ வேறக் காணல. உம்மமேல பழிவரப்படாது பாரும்!”

அடியும் தலையும் ஒரே மாதிரியான குச்சிபோல் அமைந்த அந்த எழுபது வயது தாத்தா அவளை மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண்டு பதிலளித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/120&oldid=1368753" இலிருந்து மீள்விக்கப்பட்டது